எயார் பஸ் முறைகேடுகள் குறித்து முழு விசாரணைக்கு பணிப்பு

எயார் பஸ் முறைகேடுகள் குறித்து முழு விசாரணைக்கு பணிப்புSri Lankan Air Lines-Airbus Allegations

பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு ஶ்ரீ லங்கன் விமானசேவை தலைவர் அறிவுறுத்தல்

- ஶ்ரீ லங்கன் விமானசேவை நிறைவேற்று அதிகாரியின் மனைவிக்கு 2 மில். டொலர்
- கடந்த 2004 முதல் 2016 வரை எயார் பஸ் நிறுவனம் மோசடி
- 4 வருட நீதிமன்ற விசாரணைகளில் குட்டு அம்பலம்
- விசாரணைகளுக்கான செலவாக 4 பில்லியன் டொலர்களை செலுத்தவும் உத்தரவு

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கும் எயார் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலின்போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து முழுமையாக விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய விமான சேவை, விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள எயார் பஸ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலின்போது சில நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி குறித்த தகவல்கள் இன்றைய தினம் (02) வெளியான வார இறுதி ஆங்கில செய்திப் பத்திரிகைகளிலும் நேற்றைய தினம் (01) இணையத்தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் உடனடியாக முழுமையான விசாரணையொன்றை மேற்கொண்டு அதுபற்றி தனக்கு அறிவிக்குமாறு ஊடகச் செய்திகளை பார்வையிட்ட ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை இது குறித்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகள் அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கும் முழுமையாக ஆதரவு வழங்குவதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

2011 முதல் 2015 காலப் பகுதியில், எயார் பஸ் விமான நிறுவனத்திடம் மேற்கொண்ட விமானக் கொள்வனவின்போது, இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் அறிவதாக, ஶ்ரீ லங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அரசாங்கத்தின் விசாரணை செயன்முறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு, நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ குழுவிற்கு அதன் தலைவர் அசோக் பதிரகே மற்றும் பணிப்பாளர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு அவசியமான ஆவணங்களைப் பாதுகாத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சரிபார்ப்பதற்கான பங்களிப்பினை வழங்குமாநு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

எயார் பஸ் நிறுவனமானது விமானங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் போட்டியாளரான போயிங் நிறுவனத்தின் விற்பனையை விஞ்சுவதற்காக, முறைகேடான வகையில் தமது விமானங்களை விற்பனை செய்ய, பல்வேறு நபர்களுக்கும் பல் மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2004 - 2016 காலப் பகுதியில் இம்முறைகள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில்  கடந்த 4 வருடங்களாக இடம்பெற்ற மிக நீண்ட நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நீதிமன்றத்தினால், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பான மிக நீண்ட விசாரணைகளுக்கு செலவான 4 பில்லியன் டொலர்களை அபராதமா செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், 2.1 பில்லியன் யூரோக்களை பிரான்ஸிற்கும், 984 மில்லியன் யூரோக்களை பிரிட்டனிற்கும், 526 மில்லியன் யூரோக்களை அமெரிக்காவிறகும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கை, ஜப்பான், ரஷ்யா, சீனா, நேபாளம், மலேசியா, தாய்வான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான மூன்றாம் தரப்பு தரகர்கள் மூலம் இலஞ்சத்தை வழங்கி தமது விமானங்களையும் செய்மதிகளையும் கொள்வனவு செய்வதற்கு முறையற்ற வகையில் ஏற்பாடு செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

அந்த வகையில்,
- மலேசியாவின் எயார் ஏசியா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் இருவருக்கு சொந்தமான விளையாட்டு அணிக்கு, 50 மில்லியன் டொலர் அனுசரணை வழங்கியமை.
- ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் பெயருக்கு, புரூணை பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் 2 மில்லியன் டொலர் பணம் வழங்கியமை.
- இந்தோனேஷிய தேசிய விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு 3.3 மில்லியன் டொலர் வழங்கியமை
- கானா அரசிடமிருந்து இராணுவ விமான கொள்வனவுக்கான வர்த்தகத்தை பெற பல மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் இதன்போது அம்பலமாகியுள்ளன.

கடந்த 2018, 2019 ஆண்டுகளில் போயிங் நிறுவனத்தின் 737 Max விமானங்கள் இரண்டு விபத்திற்குள்ளானதோடு, அதில் 346 பேரின் உயிர்கள் பலியானது. இதனைத் தொடர்ந்து அதன் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டிருந்தது. அத்துடன் கடந்த வாரம் அது விமான தயாரிப்பை தற்காலிகமாக கைவிடுவதாகவும் அறிவித்திருந்தது. இதன் மூலம் 87 வர்த்தக ரீதியிலான விமான கொள்வனவு முன்பதிகளையும் அது இழந்ததோடு, அந்நிறுவனம் 18 பில்லியன் டொலர் நஷ்டத்தையும் எதிர்கொண்டது.

இதன் காரணமாக, எயார்பஸ் நிறுவனத்திற்கு மேலும் வாய்ப்புகள் அதிகரித்ததோடு, எதிர்வரும் 2023 வரை அந்நிறுவனத்தில் விமானக் கொள்வனவுக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி கடந்த வருடம் மாத்திரம் எயார்பஸ் நிறுவனத்தினால் 1,200 விமான முன்பதிவுகள் மற்றும் விநியோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 02/02/2020 - 18:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை