பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாதத்துக்கு இடமளியோம்

72ஆவது சுதந்திர தின  விழாவில் ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்

மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள  தேவையற்ற தடைகள் நீக்கப்படும்

இலங்கையில் வாழ்கின்ற அனைத்துப் பிரஜைகளும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும் சுதந்திரமாக சிந்திப்பதற்கும் அபிப்பிராயங்களைக் கூறுவதற்குமான உரிமை உறுதி செய்யப்படும். அதேநேரம், இலங்கை ஒற்றையாட்சியைக் கொண்ட நாடு என்பதுடன் சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும்.

எனவே, இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.

அதிகாரப் பரவலாக்கலின் போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புகளுக்கிடையே சிறந்த ஒருமைப்பாடும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சுதந்திரதின உரையில் வலியுறுத்தினார்.

நாட்டின் 72ஆவது சுதந்திர தின தேசிய வைபவம் நேற்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

இன, மத, கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் மக்களின் நலனுக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்ற தயாராகவுள்ளேன். ஜனநாயகத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது எம்மால் சரிசமப்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. நிறைவேற்றுத் துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறையானது மிக முக்கியமாகின்றது.

வேண்டிய பல துறைகள் உள்ளன.பொதுமக்களும் பாதுகாப்புத் துறைகளும் ஒவ்வொருவரின் பொறுப்புக்களை புரிந்து கொள்ள வேண்டும். பிரஜைகளுக்கு தனிப்பட்ட உரிமைகளைப் போன்று கூட்டுரிமைகளும் உள்ளனவென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு இதன்போது முக்கியமாகிறது.

இன்றும் சமூகத்தினுள் இருப்பவர், இல்லாதவர் எனும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. நகர்ப்புற பிரதேசங்களில் உள்ள வசதிகள் கிராமியப் பிரதேசங்களில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வசதிகள் சமநிலையில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் சமநிலையில் இல்லை. தொழில் வாய்ப்புக்கள் எல்லாப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படவில்லை.

இதுவொன்றும் இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ வலுப்படும் நிலைமைகள் அல்ல. அவை நாட்டின் பொதுப் பிரச்சினைகளாகும். வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்போது நாங்கள் முதன் முதலாக செய்ய வேண்டியது மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தலாகும்.

பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், கள்வர்கள், எதிரிகள், குண்டர்கள், கப்பம் பெறுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துபவர்கள் ஆகியோரினால் இயல்பான மக்கள் வாழ்விற்கு தடைகள் ஏற்படுமாயின் அவ்விடத்தில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை.

தேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன்பாலும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளியோம். நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறிலிருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்குச் சுதந்திரம் இல்லை. அரச நிறுவனங்களினுள் ஊழல்கள், மோசடிகள் இருக்கும் வரை பொதுமக்களுக்குச் சுதந்திரம் இல்லை.

ஆகையால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து சமூக இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாகச் செயற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்நடவடிக்கைகளை வினைத்திறமை யாக்குவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை தற்போது பாதுகாப்புத் துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.

எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்குப் புதிய சவால்களைத் தொடுக்கின்றது. எனவே கருத்துக்களை வெளியிடும்போது மனச்சாட்சியின்படி செயற்படுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

எந்தவொரு இலங்கைப் பிரஜையும் தான் தெரிவு செய்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயற்பாட்டிலும் அரச நிர்வாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்.

உரிய ஆய்வு அல்லது ஒருங்கிணைப்பின்றி விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளினால் இன்று மக்கள் பெரும் தொல்லைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனூடாக பல ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் காலம், வளங்கள் மற்றும் ஜீவனோபாயம் போன்றவற்றை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.

மக்கள் சுதந்திரமாக சுயதொழிலை, பாரம்பரிய கைத்தொழிலை அல்லது தொழிற்றுறையை புரிவதற்குத் தடையாகும். காலங்கடந்த சட்டதிட்டங்கள், வரி மற்றும் ஒழுங்கு விதிகள் கட்டணங்கள் துரிதமாகத் திருத்தப்பட வேண்டும்.

வினைத்திறன்மிக்க தூய்மையான ஒரு அரச சேவை நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாத காரணியாகும். மக்களுக்கு சுதந்திரத்தின் அதிகபட்ச பயன்களை வழங்குவதாயின் அரசாங்க நிருவாகம் உரியவாறு நடைமுறைபடுத்தப்படுதல் வேண்டும்.

இதற்காக முழு மொத்த அரசாங்க நிருவாகமே பொறுப்பை கையேற்க வேண்டும்.

சுதந்திர தின விழாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பல்வேறு கலாசார அம்சங்களும் நடைபெற்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், முப்படைத் தளபதிகள், பதிற் பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சுதந்திர தின விழா நிறைவுபெற்று செல்லும் முன்னர் ஜனாதிபதி வருகை தந்திருந்த பொதுமக்களிடம் சென்று வணக்கம் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஸாதிக் ஷிஹான்

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை