வலுவான புலனாய்வு,தேசிய பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை

போட்டிச் சந்தையை உருவாக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டம்

அரச மற்றும் தனியார் துறைகளிடையே போட்டிமிக்க சந்தை மற்றும் சேவைக்கான சூழலை உருவாக்குவதன் மூலமே நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என அரசாங்கப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்று மாதகாலப்பகுதிக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அடித்தளமிட்டுள்ளோம்.

நாட்டின் கல்விக்கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். அதன் முதல் செயற்பாடாக 1,000 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு தற்போது 28,000 பேரே உள்ளீர்க்கப்படுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஒரு இலட்சம் பேர்வரை உள்ளீர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். பல்கலைக்கழக விண்ணப்பத்துக்குத் தகுதிப்பெறும் மற்றும் உயர் தரத்தை முடிக்கும் அனைவரையும், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியை கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

உயர் நிபுணத்துவம் மற்றும் கல்விச் சமூகமொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கென ஆங்கிலக் கல்வி முதல் பல்கலைக்கழகப் பட்டங்கள் வரை விரிவுப்படுத்தப்படும். கலை மற்றும் வணிகப் பிரிவுகளுக்கு மட்டுப்படுத்தப் பட்டிருந்த கல்விமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு, மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வி, பட்டங்களை பெறுவதற்கான விசேட பீடங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுக்குச் சென்று அதிகளவான நிதியை செலவழித்து கல்விக்கற்கும் மாணவர்களின் எதிர்காலத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வினைத்திறனை வெளிப்படுத்தும் தொழில் படையை உருவாகும்போது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.இதற்காகவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் வாய்ப்புகள் மிகவும் வறுமையான குடும்பகளுக்கே வழங்கப்படும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளையே நாம் பின்பற்றுகிறோம்.

தேசிய புலனாய்வு சேவையை வலுப்படுத்துவதற்கான புலனாய்வு பட்டப்படிப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வலுவான புலனாய்வு மற்றும் தேசியப்பாதுகாப்புக்கு எமது அரசாங்கம் முன்னுரிமையளிக்கும்.

சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கு பாரிய சலுகைகளையும் வழங்கியுள்ளோம். இவர்கள் மூச்செடுப்பதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு தனிநபரின் தேவைக்கான கிராமிய சிறு ஏற்றுமதிப் பயிர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் நாசமாக்கியிருந்தது. 5 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். மியன்மார், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மிளகு உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் இறக்குமதி செய்யப்பட்டன.எமது நாட்டு மிளகே உலகில் உயரிய தரமிக்கதாகும்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகுகள் கலப்படம் செய்யப்பட்டு அவை மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

வீழ்ச்சிக்கண்டுள்ள கிராமிய பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கவே, சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மீள் ஏற்றுமதியை ஆட்சிக்குவந்து 72 மணித்தியாலத்துக்குள் தடை செய்தோம்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தியும் அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்பாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமீட்டும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றியமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தேசியப் பாதுகாப்பு, ஸ்திரமான அரசாங்கம், வரி சலுகைகள், முதலீடுகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான சூழல் இருந்தால் மாத்திரமே முதலீட்டாளர்கள் நாட்டை நோக்கி வருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை