ரூ 1,000 சம்பள உயர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிக ஒத்திவைப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (13ஆம் திகதி) அரசாங்கம்,கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களு க்குமிடையில் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில் இந்நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்றுத் தெரித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கும் உடன்படிக்கையை இன்று ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

கம்பனிகள்,தொழிற்சங்கங்கள், அரச தரப்பு என முத்தரப்பினர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவிருந்தன.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தொண்டமான் ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்ததால், இந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சர் தொண்டமானும் இன்றைய தினம் உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக கருத்துகள் வெளியிட்டிருந்த நிலையிலேயே, இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பதுடன், மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் கட்டாயம் 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென வும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வினவிய போது, உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னமும் இது இறுதிப்படுத்தப்படவில்லை.

அதன் காரணமாகவே இன்றைய தினம் உடன்படிக்கையை செய்ய முடியாது போனது. எனினும் விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். எவரும் அச்சப்படத் தேவையில்லை. மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 1,000 ரூபா சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை