வாபஸ் பெறும் தீர்மானத்திற்கு அமைச்சரவை முழு அங்கீகாரம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில்  இலங்கையின் இணை அனுசரணை

ஐ.நாவின் கொள்கைகள் நியதிகளுடன் தொடர்ந்தும் சுமுகமாக அரசாங்கம் பயணிக்கும் அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கிணங்க இலங்கையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 கீழ் தீர்மானத்துக்கு கடந்த அரசாங்கம் வழங்கியுள்ள இணை அனுசரணையை 43 ஆவது கூட்டத்தொடரில் அரசாங்கம் வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய விசாரணை பொறிமுறைகளின் மதிப்பீடுகளுக்கிணங்க மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதுடன், இதற்கான உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசேட விசாரணைக் குழுவொன்றை எதிர்காலத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் பிரேரணை தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்து ஐ.நா. தீர்மானம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதுடன், 30 வருடகாலம் நாட்டில் நிலவிய ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அத்தருணத்தில் இருந்தனர். அக் காலகட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து நிலையான சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

யுத்தத்தின் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அனைத்துத் துறைகளையும் மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைளை மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருந்தார். 20 வருடங்களின் பின்னர் வடக்கின் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான ஜனநாயக சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு சமாந்திரமாக சட்டவாட்சி, மனிதவுரிமைகள் வலுப்படுத்தப்பட்டதுடன் துறைசார் நிறுவனங்களும் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய பொறிமுறைக்கு அமைவான பல ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. மனிதவுரிமைகளின் பிரதான அங்கமான உயிர்வாழ்வதற்கான உரிமை அனைத்து இலங்கையர்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் தேசிய பொறிமுறைகள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.

ஸ்திரத்தன்மை, நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்ததை அறிந்துகொள்ள முடியாத மனிதவுரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் குழுவொன்று 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை பலவந்தமாக நிறைவேற்றிக்கொண்டன.

நல்லிணக்க விடயத்தில் அப்போதுவரை வளர்ச்சியடைந்திருந்த நாட்டை கைவிட்ட, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மனிதவுரிமைகள் பேரவையில் அதற்கு முன்னர் எடுத்திராத தீர்மானத்தை இலங்கையின் வெளிநாட்டுக்கு கொள்கைகளை மீறி எடுத்திருந்தது. அதன் பிரகாரம் 30/1 கீழ் தீர்மானத்தை உறுப்பு நாடுகளுடன் இணை அனுசரணை வழங்கி கடந்த அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் இலங்கை மக்களின் அனுமதியின்றி ஜனநாயகத்திற்கும் எமது இராஜதந்திர உறவுகளுக்கு எதிராகவும் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த யோசனையை நிறைவேற்றுவதற்கான கருத்தை அரசாங்கம் தம்மிடம் கோரியிருக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார்.

30 வருடகால யுத்தம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழுவின் முன்மொழிவுகளுக்கு மாறான சில தகவல்களும் 30/1 தீர்மானத்துக்குள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தரவுகள் அனைத்தும் தவறானதென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் நெஸ்பி அறிக்கையொன்றை சமர்ப்பிதிருந்தார். சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைப்புகளும் போதியளவு சாட்சிங்கள் உள்ளபோதும் தவறான தரவுகளையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளன. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்பட்டதால் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களும் இடம்பெற்றன.

அரசியலமைப்பு உட்பட நிறைவேற்ற முடியாத சில நிபந்தனைகளுக்கு இலங்கையை உட்படுத்தினர். 30/1 கீழ் தீர்மானத்துக்கு இணை அனுசரணையை கடந்த அரசாங்கம் வழங்கியிருந்தமையானது இன்றுவரை நாட்டின் சுயாதீனத்துக்கும் கௌரவத்துக்கும் ஒரு கறைப்படிவாகும். மனிதவுரிமைகள் பேரவைக்கு கடந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் 2015- – 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினர். 2017, 2019ஆம் ஆண்டுகளில் இத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது.

30/1 தீர்மானத்தால் இலங்கைமீது பாரிய சுமைகள் சுமத்தப்பட்டன. புலம்பெயர் தமிழர்களின் அடிப்படைவாத குழுக்கள் அபிலாஷைகளை சில ஊடகங்கள் மூலமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் அடைந்துக்கொள்ள முற்பட்டதுடன், இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளும் தண்டனைகளும் விதிக்க செயற்பட்டனர்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள கடந்த அரசாங்கம் அசமந்த போக்கில் இருந்தது. தவறு செய்தவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர். அரசியலமைப்பில் வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின் சுயாதீன விடயங்களில் தலையீடு செய்ய முடியாதென உள்ள போதிலும் 30/1 தீர்மானத்துக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் இலங்கை மக்களால் நிலையான அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டுசெல்லவும் பிளவுபடாத வெளிநாட்டு கொள்கையை மத்தியஸ்தத்துடன், தேசிய பொறிமுறைகளின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் ஆணை வழங்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான அறுதிப்பெரும்பான்மை கிடைத்தது. வளமான நாடு சுபீட்சமான நோக்கு என்ற அரசாங்கத்தின் இலக்குடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்ல கொள்கை பிரகடனத்தின்படி நாடு முன்னோக்கிப் பயணிக்கும்.

அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கூறப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள மனிதவுரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் கீழ் கண்ட தீர்மானங்களை எடுக்கவும் இராஜதந்திர உறவுகளை மறுகட்டமைப்பு செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2015, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை மனிதவுரிமைகள் பேரவையில் அறிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவை மற்றும் ஐ.நாவுடன் தொடர்ச்சியாக பணியாற்றுவோம். சுதந்திரமடைந்தது முதல் ஐ.நாவில் நாம் அங்கம் வகிக்கிறோம். ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற வகையில், அவர்களது கொள்கைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்பதுடன், ஒத்துழைப்புகளும் பெற்றுக்கொள்ளப்படும். நல்லிணக்கத்தையும் நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள தேசிய பொறிமுறை தொடர்ந்து பின்பற்றப்படும். மனிதவுரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை