மலையகத்தில் உயரமான முருகன் சிலை

 தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உயரமான திருவுருவச்சிலை மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் – ராகலை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டே 60 அடி உயரத்தில் திருவுருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் மாவல்லபுரத்திலிருந்து அசோக்குமார் தலைமையிலான சிற்பாச்சாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். எட்டு சிற்பாச்சாரிகள் இணைந்து இரண்டு வருடகாலப்பகுதிக்குள் சிலை அமைக்கும் திருப்பணியை நிறைவுசெய்தனர். அசோக்குமார், ரமேஷ் குமார், மணிகண்டன், கார்த்திகேயன்,பாஷ்கர்,சிங்காரம், முத்துகுமார் ஆகியோர் இப்பணியில் கடமைடயாற்றினர்.

அத்துடன், மாவல்லபுரத்திலிருந்து 35 அடி உயரமான வேலும் கொண்டுவரப்பட்டது. தண்டாயுதபாணி என்பவரே வேலை வடிவமைத்துள்ளார்.

ராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 9-.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உலகின் மூன்றாவது உயரமான திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் சயனநிலையிலுள்ள விஷ்னு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. வத்தளை ஹேகித்த அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்ட 32 அடி உயரமான முருகன் சிலையே இதுவரையில் இலங்கையின் உயரமான முருகன் சிலையாக கருதப்படுகின்றது.

அத்துடன், இக்கோவிலிலேயே தெப்பத்தேர் திருவிழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவருகின்றது. எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் திருவிழாவுக்காக பல இலட்சம் ரூபா செலவில் தெப்பத்தேர் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா கோலாலம்பூரில் (140 அடி உயரம்) அமைக்கப்பட்டுள்ளது.

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை