சஹ்ரான் பின்னணியில் செயற்பட்ட சக்தி யாரென நாட்டுக்கு கூறவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதி சஹ்ரானின் பின்னணியிலிருந்த சக்தி யாரென நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசாங்கத்தின் குறுகிய காலத்திற்குள் எதிர்பார்த்ததைவிட பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளன. ஓரிரு தினங்களுக்கு முன்னர் எனது மன்னார் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல ஆவணங்கள் சி.ஐ.டியினரால் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர் எனது மனைவியின் வீட்டில் ஆவணங்களை எடுத்தாக செய்திகள் வெளியாகின. எனது வீட்டிலோ அல்லது மனைவியின் வீட்டிலோ அல்லது எனது கொழும்பு வீட்டிலோ எவ்வித ஆவணங்களும் எடுக்கப்படவில்லை. அத்துடன் நான் ஒரு இலட்சம் டொலர் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். என்னை சிறையில் அடைக்க மேற்கொள்ள சதியாகும். அந்த அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிப்படைந்த மக்களை வைத்து வங்குரோத்து அரசியலை செய்கின்றார். இவர்தான் தன் மனைவியை வைத்து பல கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அரச பணத்தில் வீடுகளையும் கட்டியுள்ளார்.

இவை சிங்கள மக்கள் மத்தியில் என்னை மோசமானவராக சித்தரிக்க செய்யப்படும் சதியாகும். 2001ஆம் ஆண்டு நான் பாராளுமன்றம் வரும்போது எனது சொத்துகள் தொடர்பில் பாராளுமன்றில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன் என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை