இலங்கையர்கள் என்ற உணர்வில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்

"இலங்கையர்கள்" என்ற உணர்வோடு ஐக்கியத்தை வலுப்படுத்தும் உணர்வில் சகலரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டுமென முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.நாளை கொண்டாடப்படவுள்ள நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

எமது முன்னோர்கள் இந்த நாட்டுக்குச் செய்த சேவைகள் மறக்க முடியாதவை. இன்று இவை சிலரால் மறைக்கப்படுகின்றமை வேதனை தருகிறது.

நாம் எமது முன்னோர்களின் வரலாற்றைத் தேடிப் படித்து, அதனை எமது எதிர்காலச் சந்ததிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இன்றைய நிலைமையில் கட்டாயக் கடமையாகியுள்ளது.

எமது தேசப்பற்றை தேசியக் கொடி மற்றும் தேசியக் கீதத்தோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல், எல்லா இன மக்களுடனும் மனித நேயத்துடன் நடந்தும் நிரூபிக்க முன்வர வேண்டும். சுயநலமின்றி சமூக அக்கறை கொண்டவர்களாக நாம் மாறுவதே சிறுபான்மையினரைப் பாதுகாக்கும்.

எமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை எமது முன்னோர்களின் செயற்பாடுகளாலேயாகும்.

இறைவனுக்கும் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக எமது இறப்பும்,பிறப்பும் அமைய வேண்டும். எவரும் எம்மை வெறுக்காத அளவுக்கு எமது வாழ்கை மற்றும் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், யாரும் மறக்காத அளவுக்கு எமது மரணம் நிச்சயம் இருக்கும். எனவே, நாளை (04) உதயமாகும் நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்குமுகமாக எமது இல்லங்கள், வியாபாரஸ்தலங்கள், அலுவலகங்களில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு எமது தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை நிருபர்

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை