ஒட்டுசுட்டானில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இத்திமடு வீதியில் ஆயிரம் கிராம பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாலம் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் நகரிலிருந்து பெரிய இத்திமடு தண்டுவான் பழம்பாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1700 குடும்பங்கள் பயன்படுத்துகின்ற இவ் வீதியில் பாலமொன்று இல்லாமையால் மக்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அரசாங்கத்தினுடைய ஆயிரம் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலம் நிர்மாணம் செய்யப்பட்டது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் குறித்த பாலம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த் கலந்து கொண்டு பாலத்தினை நாடா வெட்டி மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் பூ.சிவநேசன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் க.ஜெய்றோசன், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாங்குளம் குறூப் நிருபர்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை