72 ஆவது சுதந்திர தினம் கொழும்பில் நாளை கோலாகல நிகழ்வு

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; 8 ஆயிரம் படையினர் பங்கேற்பு

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் பங்கேற்கும் விசேட சமய வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் நேற்று பிரித் பாராயண நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இப் பிரித் பாராயண நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உட்பட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சுதந்திர தினத்தையொட்டிய பௌத்த சமய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி பொல்வத்த, தர்மகீர்த்தியாராம விஹாரையில் நாளை காலை இடம்பெறவுள்ளது. இவ்வழிபாடுகளிலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, நாளை மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இந்து சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. இதில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இஸ்லாமிய சமய நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளன. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா, காதர் மஸ்தான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்வுகளும் பகத்தலே பெஸ்ட்ரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

தேச பிதா டி.எஸ் சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதுடன், சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசியகொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் இடம்பெறவுள்ளது. அதற்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டி பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலி முகத்திடலில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறாமையால் கொழும்பின் புறநகர் பகுதிகளில் வாகன நெறிசல் ஏற்படவில்லையென சாரதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் மாத்திரமே ஓரளவு வாகன நெறிசல் காணப்படுகிறது.

சுதந்திரதின நிகழ்வில் சுமார் 2,500 பேர்; கலந்துகொள்ள உள்ளதுடன், 250 விசேட பிரமுகர்களும், சுமார் 1000 பொது மக்களும் கலந்துகொள்ளனர்.

முப்படை பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8,260 பேரைக் கொண்ட மரியாதை ஊர்வலங்கயுளும் நடைபெறவுள்ளன. மரியாதை அணிவகுப்பில் மாத்திரம் 4,325 படையினர் கலந்துகொள்ளனர். கடற்படையில் 860 பேரும், இலங்கை விமான படையில் 815 பேரும், இலங்கை பொலிஸார் சார்பில் 1382 பேரும், சிவில் படைகளில் 515 பேரும் தேசிய மாணவர் படையணியில் 315 பேரும் கலந்துகொள்ள உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுந்திரதின நிகழ்வுகளுக்கான மேற்கொள்ளப்பட்டுவரும் ஒத்திகை நடவடிக்கைகளுக்ககாக கொழும்பில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 15 அரச, தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.செனநாயக்க கல்லூரி,ரோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, யஷோதரா கல்லூரி, மியூசியஸ் கல்லூரி, சென் பிரிட்ஜெட் கல்லூரி, கொழும்பு பெண்கள் கல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை, வைசர்லி கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு 03ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12- மிஹிது வித்தியாலயம், அல்- ஹிதாயாக வித்தியாலயம், அசோக வித்தியாலயம் என்பவற்றுக்கு நாளை திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் செவ்வாய்க்கிழமை இரவுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக கொழும்பு மஹாநாம, பொல்வத்த புனித மைக்கல், புனித மேரி கனிஷ்ட வித்தியாலயம் என்பன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 5.00 மணி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை ஒத்திகை நடவடிக்கைகளுக்கான சுதந்திர சதுக்கத்தை அண்டி பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 26ஆம் திகதி முதல் நாளை 03ஆம் திகதிவரை இவ்வாறு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் நிமித்தம் குறிப்பிட்ட சில வீதிகள் காலை 6.00 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை மூடப்படவுள்ளன. மூடப்படும் வீதிகளுக்குள் வசிக்கும் மக்களுக்கு மாத்திரமே உட்பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும்.

கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டர்ஸ்க்கு உட்பிரவேசிக்கவும், கொழும்பு நூலக சந்தியிலிருந்து கிளாஸ் ஹவுஸுக்கு உட்பிரவேசிக்கவும், நூலக சந்தியிலிருந்து ஆனந்தகுமாரசுவாமி மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், தர்மபால மாவத்தையிலிருந்து எம்.ஆர்.சேனாநாயக்க மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், சொய்ஷா சுற்றுவட்டத்திலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், எம்.ஆர்.சேனாநாயக்க மாவத்தையிலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், விஜேராம மாவத்தையிலிருந்து ரோஸ்மீட் பிரதேசத்தின் ஊடாக கன்னகர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், விஜேராம மாவத்தை பான்ஸ் பிரதேசத்தின் ஊடாக கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், ஹோர்டன் பிரதேசத்தின் விஜேராம சந்தியில் ஹோர்டன் மெட்லேன்ட் க்ரஸனட் சந்திக்கு உட்பிரவேசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விஜேராம மாவத்தையிலிருந்து ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தையின் ஊடாக க்ரஸன்ட் பிரதேசத்திற்கு உட்பிரவேசிக்கவும், ஹோர்டன் பிரதேசத்தின் க்ரஸன்ட் சந்தியிலிருந்து ஹோர்டன் சுற்றுவட்டத்திற்கு உட்பிரவேசிக்கவும், ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தையிலிருந்த மெட்லேன்ட் க்ரஸனட் பகுதிக்கு பிரவேசிக்கவும், விஜேராம மாவத்த, வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், வித்தியா மாவத்தையிலிருந்து மெட்லேன்ட பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்கவும், பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (ஆர்.எப்.சேனாநாயக்க சந்தியில்) மெட்லேட்ன் பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்கவும்,

பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (டொரின்டன் சந்தியில்) ப்ரேமகீர்த்தி அல்வீஸ் மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், ப்ரேமகீர்த்தி மாவத்தையிலிருந்த சுதந்திர சதுக்க பாதைக்கும், ஸ்டேன்லி விஜேவர்தன மாவத்தையிலிருந்து இலங்கை மன்றப் பாதைக்கும், இலங்கை மன்றத்துக்கு அருகில் சுதந்திர சதுக்க பாதைக்கு பிரவேசிக்கவும், இலங்கை மன்றத்தின் ஊடாக சுதந்திர சதுக்க பாதைக்கும், சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் சுதந்திர சதுக்க மாவத்தைக்கும், நந்தா மோட்டர்ஸ் பக்கத்திற்கும், மெட்லேன்ட் க்ரஸன்ட் பகுதிக்கும் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த பாதைகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸ் முன்னெடுத்துள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை