இனத்தின் பெயரிலான கட்சிகளை இனவாதமாகப் பார்க்க முடியாது

சிங்கள பௌத்த வாக்குகள் கிடைக்காதமை குறித்து ஐ.தே.கவும் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காதது பற்றி ஜனாதிபதியும் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ஸ்திரமற்ற அரசுகள் உருவாவதை தடுக்க விகிதாசார தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென அமைச்சர் டளஸ் குறிப்பிட்டார். இணக்கப்பாட்டு அரசுகள் உருவாவது பாதகமானவையல்ல. அதே வேளை பெரும்பான்மை கிடைப்பதால் என்ன நடக்கும் என்பதும் எமக்கும் தெரியும்.

தமிழில் தேசிய கீதம் இசைப்பதை தடுப்பதற்கு எதிராக எனக்கும் வாசு தேவநாணயக்காரவிற்கும் குரல் கொடுக்க நேரிட்டது.  மீண்டும் அந்தப் பிரச்சினை இன்று ஏற்பட்டுள்ளது.தமது இனத்தின் பெயரால் இருப்பதால் அதனை இனவாத கட்சி என்று கூறிவிட முடியாது. தமது இனத்திற்கு மாத்திரம் மட்டுப்பட்டு வெற்றிகரமான அரசியல் செய்ய முடியாது. சிங்களம் மாத்திரம் நிலைப்பாட்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க கட்சியை உருவாக்கி வெற்றி பெற்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவிற்கு பௌத்த மக்களின் வாக்குகள் கிடைக்காதது குறித்து சுயவிமர்சனம் செய்ய வேண்டும்.அதே போன்று ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்காததை இனவாதமாக நோக்கக் கூடாது.ஏன் அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி மேற்கொள்ளும் சாதகமான விடயங்களுக்கு நாம் ஆதரவு வழங்குவோம் என்றார்.

 

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை