இனவாதம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாகும்

தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர்

சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் பரஸ்பவரம் தம்மிடையே கொண்டுள்ள வெறுப்புணர்வை விலக்கினால் இலங்கையர் என்ற கண்ணியத்தோடு வெற்றியடையலாம் என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் “இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் செயற் திட்டம் சம்பந்தமான செயலர்வு நேற்று (12) மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

“இன மத முரண்பாடுகள் காரணமாக சமூகத்தில் எழும் தாக்கங்கள்” என்ற தொனிப் பொருளில் சமன் செனவிரட்ன கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்வில் உலகின் பல பாகங்களிலும் சரித்திர பூர்வமாக இடம்பெற்று வந்த இனவெறுப்பு, மதவாத செயற்பாடுகள் தோல்வியடைந்ததை வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய அவர், இலங்கையர்களும் இதை ஒரு வரலாற்று அனுபவப் பாடமாகக் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். இன வெறுப்பும் மதவாதமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பெருத்த சவாலாக இருப்பதனால் இந்த விடயம் குறித்து சமாதான ஆர்வலர்கள் உடன் செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இனவெறுப்பைக் கக்குவோர் மீது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்வமத செயற்பாட்டாளர்கள் வெறுப்புப் பேச்சுக்களை வெறுக்கும் செயற்பாட்டாளர்களாக மாற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தென்னாபிரிக்காவில் கோலோச்சிய இனவெறுப்பும் இனவாதமும் கடைசியில் தோல்வியைத் தழுவியது என்று சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு மக்கள் பழிவாங்கும் எண்ணமில்லாது உண்மையையும் நல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொண்டதால் இப்பொழுது இனவெறுப்புணர்வில்லாது அங்கு வெள்ளையர்களும் கறுப்பர்களுமாக இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மெச்சத்தக்க அளவில் கட்டியெழுப்பியுள்ளதோடு, அமைதிக்கும் அன்புக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்” என்றும் அவர் வரலாற்றாதாரங்களை முன்வைத்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை