கிழக்கு முஸ்லிம்கள் ஓரணியில் பயணிப்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

கிழக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் பயணிப்பதே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அரசியல் விமர்சகர் முனைமருதவன் எம். எச். எம். இப்றாஹிம் எழுதிய நான் எய்த அம்புகள் நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது லீமேரியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (11) இடம்பெற்றது. அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம்கள் இன வன் செயல்களுக்கு பலி கடாக்கள் ஆக்கப்பட்டனர். அளுத்கமவிலும், திகனவிலும் நடந்தேறிய கொடூரங்களை நாம் அறிவோம். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளக முத்திரை குத்தப்பட்டனர். இவற்றுக்கான காரணம் பெருந்தலைவர் அஷ்ரப்பின் குரலுக்கு மாறாக நடந்ததுதான். நான் சுத்தமான முஸ்லிம் காங்கிரஸ்காரன் தான். அதாஉல்லா இல்லாத முஸ்லிம் காங்கிரஸா? ஆனால் அதில் உள்ள விடயம் என்னவென்றால் நான் அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸ்காரன். அடுத்த தலைமைத்துவத்தை கண்டு கொண்டு விட்டேன், இனி ஒரு இரவுக்குள் மரணித்தாலும் பரவாயில்லை என்று பெருந்தலைவர் அஷ்ரப் பேசியதை நேரில் செவிமடுத்தவர்களும் இங்கு உள்ளனர். அதற்காக அவருடன் பிடித்த, எடுத்த புகைப்படங்களை காட்டி அரசியல் செய்பவன் நான் அல்லன்.

ஒரு தலைவனை உருவாக்கி அவனோடு பயணிக்க நாம் நினைத்தோம். அது முடியாத காரியம் என கண்டு அங்கு இருந்திருந்தால் பதவிகளை மிக இலகுவாக பெற்று கொண்டு காலுக்கு மேல் கால் போட்டு இருந்திருக்க முடியும். ஆனால் சமூகத்தின் தேவைகளை உணர்ந்தவர்களாக பதவிகளை விட்டெறிந்து அஷ்ரபின் போராளிகளாக வெளியேறி வந்தோம்.

ரவூப் ஹக்கீம் தலைவராக வந்த பிற்பாடு ஒலுவிலில் பேசிய முதலாவது கூட்டத்தில் தலைவர் அஷ்ரப் எங்களுக்கு ஒரு கச்சை துண்டை தந்து விட்டு போய் இருக்கிறார் அதை வைத்து நிர்வாணத்தை மறைப்பதா, அதை தலை பாகையாக அணிவதா? என்றல்லவா கேள்வி எழுப்பினார். அந்த இடம்தான் அதாஉல்லா பிரிவதற்கு காரணமாக அமைந்தது.

முஸ்லிம் சட்டத்தை நீக்குவதற்கு எதிராக இப்போது கூக்குரல் போடுகின்றனர். ஆனால் ஹக்கீம் போன்றோர் திருமண வயதை 18 ஆக கொண்டு வர வேண்டும் என்று அப்போது சொன்னார்கள். நான் ஒருவன் மாத்திரம் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அன்றைய சூழல் பொருத்தமானது அல்ல என்று குரல் கொடுத்து சட்ட வல்லுனர்களுக்கு எனது அந்த செய்தியை அனுப்பி இருந்தேன் என தெரிவித்தார்.

நாவிதன்வெளி தினகரன் நிருபர்

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை