லிபியாவில் யுத்த நிறுத்தத்திற்கு கலீகா ஹப்தர் படை இணக்கம்

லிபியாவில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான துருக்கி மற்றும் ரஷ்யாவின் அழைப்பை அடுத்து அந்நாட்டின் பலம்மிக்கவரான ஜெனரல் கலீபா ஹப்தர் ஞாயிறு நள்ளிரவு தொடக்கம் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளார்.

லிபியாவின் நீண்ட காலத் தலைவர் முஅம்மர் கடாபி 2011இல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் அந்நாட்டின் ஐ.நா ஆதரவு அரசிடம் இருந்து தலைநகர் திரிபோலியை கைப்பற்ற ஹப்தர் முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் ஞாயிறு நள்ளிரவு தொடக்கம் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்தபோதும் தொடர்ந்து போராடுவதற்கு ஹப்தர் முன்னர் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த யுத்த நிறுத்தத்திற்கு கடந்த சனிக்கிழமை உடன்பட்ட ஹப்தர், எதிர் தரப்பினர் இதனை மீறினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

லிபியாவில் தற்போது திரிபோலியை தளமாகக் கொண்ட ஐ.நா ஆதரவு அரசு மற்றும் கிழக்கு மற்றும் தெற்கை மையமாகக் கொண்ட ஹப்தரின் படை செயற்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினையை இஸ்லாமிய போராளிகள் மற்றும் குடியேறிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்கின்றன.

ஐ.நா ஆதரவு அரசுக்கு உதவியாக துருக்கி தனது துருப்புகளை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது. மறுபுறம் ஹப்தர் படைக்கு ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து போன்ற நாடுகள் ஆதரவளிக்கின்றன.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை