'நோபல் பரிசு எனக்குரியது' டொனால்ட் டிரம்ப் ஆதங்கம்

அமைதிக்கான நோபல் பரிசு கடந்த ஆண்டு தமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

ஒஹாயோ மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டிரம்ப் அது தொடர்பாகப் பேசினார். தாம் ஒரு நாட்டைக் காப்பாற்றியதாகவும், போர் ஏற்படாமல் தடுத்து ஓர் உடன்பாட்டை எட்டியதாகவும் அவர் கூறினார்.

ஆனால், பரிசோ மற்றவருக்கு என்று டிரம்ப் பேசினார். அது எந்த நாடு என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.

இருப்பினும் அவர் எத்தியோப்பியாவையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு வழங்கப்பட்டது.

43 வயதுடைய அபி, எத்தியோப்பியாவில் பல்வேறு தாராளமய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, சிறையிடப்பட்டிருந்த பல்லாயிரம் எதிர்க்கட்சியினரை விடுவித்து அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

அண்டை நாடான எரித்திரியாவுடன் பகையை மறந்து, அமைதியான முறையில் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததற்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால், அணுவாயுதங்களை அகற்றத் தாம்தான் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை அணுகியதாகவும், அதற்காகவே தமக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாகவே தமது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை