லிபியாவில் நிலைகொள்ள துருக்கிப் படைகள் பயணம்

பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் லிபியாவுக்கு துருப்புகளை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோலியை மையமாகக் கொண்ட ஐ.நா ஆதரவு அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு லிபியாவைத் தளமாகக் கொண்ட ஜெனரல் கலீபா ஹப்தரின் தலைமையிலான கிளர்ச்சிப் படையுடன் லிபிய அரசு சண்டையிட்டு வருகிறது.

ஜெனரல் ஹப்தருக்கு எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு அளிப்பதோடு ஐ.நா ஆதரவு லிபிய அரசுக்கு துருக்கிய மற்றும் அதன் கூட்டணியான கட்டார் ஆதரவளிக்கின்றன.

திரிபோலியை கைப்பற்ற முயலும் கிளர்ச்சிப் படை கடந்த சனிக்கிழமை இராணுவ கல்லுௗரி ஒன்றின் மீது நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.

“ஒருங்கிணைப்பை மேற்கொள்வதே எமது படையின் பணியாகும். அவர்கள் அங்கு செயற்பாட்டு மையங்களை ஏற்பாடுத்துவார்கள். எமது படையினர் தற்போது படிப்படியாக அங்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று சி.என்.என் துர்க் தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் நோக்கம் “போர் புரிவதல்ல” என்று குறிப்பிட்ட அவர், “சட்டபூர்வமான அரசுக்கு ஆதரவளிப்பதும் மனிதாபிமான அவலம் ஒன்றை தடுப்பதுமாகும்” என்று தெரிவித்தார்.

துருக்கிப் படைகளை லிபியாவுக்கு அனுப்புவதற்கு கடந்த வாரம் துருப்பி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 325 வாக்குகள் ஆதரவாகவும் 184 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.

எனினும் துருக்கி விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று மூடிய அறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை