மழை திரும்பிய போதும் ஆஸியில் தொடர்ந்து காட்டுத் தீ எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் மழை பெய்து வெப்பநிலை தணிந்தபோதும் காட்டுத் தீ மீண்டும் தீவிரம் அடையும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிட்னி தொடக்கம் மெல்போர்ன் வரை கிழக்கு கரையோரங்களில் நேற்று சிறு மழை பெய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸிலும் மழை பதிவாகியுள்ளது. எனினும் வரும் வியாழக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் நீடிக்கும் பெரும் காட்டுத் தீச் சம்பவங்கள் பாரிய காட்டுத்தீயை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

“ஆறுதல் அடைவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை” என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் கிளடிஸ் பெரஜிக்லியான் நேற்று குறிப்பிட்டார்.

தீச்சம்பவங்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்காக உதவி விநியோகங்களை நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் காட்டுத்தீ மோசமான நிலையை எட்டியதோடு சிறு நகரங்களில் பலநூறு சொத்துகள் அழிந்ததோடு பிரதான நகர வானம் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்து வருகிறது.

காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நேற்று தீ குறித்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பமான இந்த காட்டுத் தீ சம்பவங்களால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 2,000 வீடுகள் தீயில் நாசமாகின. தலைநகர் கன்பெராவில் காற்றுத் தரம் உலகின் மோசமான நிலையை எட்டியுள்ளது.

காட்டுத் தீ காரணமாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை