கிழக்கு முஸ்லிம்கள் ஓரணியில் பயணிப்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு

கிழக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் பயணிப்பதே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று  தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

அரசியல் விமர்சகர் முனைமருதவன் எம். எச். எம். இப்றாஹிம் எழுதிய நான் எய்த அம்புகள் நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (11) இடம்பெற்றபோது இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது;

முஸ்லிம்கள் இன வன் செயல்களுக்கு பலி கடாக்கள் ஆக்கப்பட்டனர். அளுத்கமவிலும், திகனவிலும் நடந்தேறிய கொடூரங்களை நாம் அறிவோம். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளக முத்திரை குத்தப்பட்டனர். இவற்றுக்கான காரணம் பெருந்தலைவர் அஷ்ரப்பின் குரலுக்கு மாறாக நடந்ததுவேதான். நான் சுத்தமான முஸ்லிம் காங்கிரஸ்காரன்தான். நான் அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸ்காரன். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதை தவறாக யாரும் அரைகுறையாக பேச கூடாது. முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்தவே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் அதை செய்தார். 

தமிழர்களும் அதைதான் நம் கண் முன்னே செய்தனர். நாம் சிறுபான்மையினராக ஒரு அமைப்பிலே வாழ்ந்து வந்தோம். அதில் இருந்து விலகியவர்களாக, முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்தவே அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை முதலில் ஆரம்பித்தார். அதில் வர போகிற பிரச்சினைகள், சிக்கல்கள் ஆகியவற்றை உணர்ந்தபோதே இறுதி காலங்களில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் அரசியலை முன்னெடுத்து கொண்டு போனார். தமிழர்கள், சிங்களவர் என்று ஏராளமோனோர் வந்து இணைந்தவர். அவர்களில் இன்றைய விமலவீர திஸநாயக்க எம். பியும் ஒருவர். வடக்கு, கிழக்குக்கு வெளியில் இருந்து வந்தும் இணைந்தார்கள். நாட்டு மக்கள் அனைவருமே அஷ்ரப்பை நோக்கி வந்தனர். அவ்வாறான சூழலில்தான் நமது தலைவர் மரணித்தார்.

முஸ்லிம் சமூகத்துக்கு விடுதலையை பெற்று கொடுக்கவே நாம் அஷ்ரப்புடன் ஒன்றாக நின்று இணைந்து பயணித்தோம். அவரிடம் கொள்கை இருந்தது. மக்கள் குறித்த நம்பிக்கை இருந்தது. 12 வீத வெட்டு புள்ளியை 05 வீத வெட்டு புள்ளியாக அவர் கொண்டு வந்தார். அவர் அன்று அதை கொண்டு வந்தபோது மு. காவை வைத்து அரசியல் செய்வதாகதான் இருந்தது. ஆனால் அவர் வாழ்ந்தபோதிலும் சரி, மு. கா வாழ்கின்ற இந்த கணம் வரையிலும் சரி அந்த வெட்டு புள்ளி குறைப்பு மூலமாக ஒரு ஆசனத்தைத்தானும் மு. கா வெல்லவே இல்லை. தலைவர் மரணித்த காலத்தில் கண்டியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ரவூப் ஹக்கீம் அங்கு வெற்றி பெற்றார் அல்லவா? தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் ரவூப் ஹக்கீம் என்பவர் இன்று அரசியல் அரங்கில் இருந்திருக்கவே மாட்டார். பல உயிர்களின்  தியாகத்தில்தான் அவருக்கு அந்த  பாராளுமன்ற பதவி கிடைத்ததே ஒழிய வெட்டு புள்ளி குறைப்பு மூலமாக அல்ல.

நாட்டில் பல தேவைகள் உள்ளன. பெரும்பான்மை மக்கள் எல்லோருடனும் ஒற்றுமையாக நாம் வாழ வேண்டி இருக்கின்றது. தலைவர் அஷ்ரப் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பதற்கு சிந்தித்தார். ஆனால் இன்று சிங்கள - முஸ்ல்ம் மக்களுக்கு இடையிலான பாலம் ஒன்றை நாம் தேடி திரிகிறோம்.  தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான பாலமாக  முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று அஷ்ர சொல்லி விட்டு போக சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலும் பெரிய பாலங்களை தேட வேண்டி எமக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். மூன்றில்  இரண்டு பகுதி முஸ்லிம்கள் கிழக்குக்கு  வெளியில் அதிலும் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்றனர். அதுவும் ஐதாக வாழ்கின்றனர்.  ஆகவேதான் சமஷ்டி போன்ற தீர்வு வேண்டாம் என்று நாம் கூறுகின்றோம். வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களை காப்பாற்றுவதற்காகத்தான் அவ்வாறு கூறுகின்றோம். ஆனால் அவர்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க முடியாது. கிழக்குதான் அவர்களுக்குமாக குரல் கொடுக்க கூடிய தளம் ஆகும். அவர்கள் முன்பு போல வேறு வேறுபட்ட பெரிய கட்சிகளில் இப்போதும் பயணிக்க முடியும். ஆனால் கிழக்கு மக்கள் எப்போதும் ஒரு அணியில் ஒரு நிலையில்தான் நிற்க வேண்டும் என்கிறோம்.

(எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா - நாவிதன்வெளி தினகரன் நிருபர்)

Sun, 01/12/2020 - 16:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை