பிலிப்பைன்ஸில் எரிமலை ஆபத்துக்கு மத்தியில் மக்கள் வீடு திரும்ப முயற்சி

சீற்றமடைந்திருக்கும் பிலிப்பைன்ஸின் தால் எரிமலையில் பாரிய வெடிப்பு ஒன்று நிகழும் ஆபத்து தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை தடுக்க நிர்வாகம் போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை லாவா குழம்புகள் மற்றும் சாம்பலை கக்க ஆரம்பித்தது தொடக்கம் சுமார் 40,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.

தால் எரிமலையைச் சூழவிருக்கும் சமார் 65 கிலோமீற்றர் பகுதி ஆபத்தான வலயம் என நிர்வாகம் அறிவித்திருப்பதோடு மக்கள் அங்கு செல்வதை தடுத்து வருகிறது.

எந்த ஒரு நேரத்திலும் அந்த எரிமலையில் பயங்கர வெடிப்பு நிகழலலாம் என்று தேசிய நில அதிர் நிறுவனம் எச்சரித்திருந்தபோதும் நாட்கள் கடந்திருக்கும் நிலையில் பொறுமை இழந்திருக்கும் மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும்படி கோரி வருகின்றனர். தாம் மற்றும் தமது அண்டை வீட்டார்கள் கால்நடைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்றும் நிரம்பி இருக்கும் சாம்பல்களை அகற்ற வேண்டி இருப்பதாகவும் டலிசாய் சிறு நகரைச் சேர்ந்த மெல்வி கசிலோ கோரியுள்ளார்.

இந்த சமூகத்தினர் தால் எரிமலை அமைந்துள்ள ஏரிக் கரையில் வசிப்பவர்களாவர். இவர்கள் எரிமலை சீற்றம் கண்டதை அடுத்து உடுத்த உடையுடன் அவசரமாக வெளியேறியவர்களாவர். “நாம் எமது வீடுகளுக்குத் திரும்பி கூரையை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. அவை சாம்பலால் மூடியி இருப்பதோடு இடிந்து விழக் கூடும்” என்று கசிலோ குறிப்பிட்டா். மக்கள் மீண்டும் வீடு திரும்புவதை தடுக்க சில பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் எரிமலை சற்று அமைதி அடைந்திருப்பதோடு, குறைவான சாம்பலை வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் வழமைக்கு திரும்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. எனினும் எரிமலை அதிர்வுகள் தொடர்ந்து பதிவாவது எரிமலைக் குழம்பு தொடர்ந்து இயங்குவதை காட்டுகிறது. இந்நிலையில் தால் எரிமலை தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை