இலங்கையில் சர்வதேச போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

இலங்கையில் சர்வதேச மட்டத்திலான போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தி அதன் மூலம் விளையாட்டு முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது நாட்டில் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்றும் அதன் மூலம் இங்கு விளையாட்டு முதலீடுகளை ஏற்படுத்தலாம்.

அதன்மூலம் சர்வதேச மட்டத்தில் எமது நாட்டுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் வேலைத் திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும். அவர்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தினால் சுயமாக விளையாட்டுக்களில் ஈடுபட முடியும் என காத்மண்டுவில் கடந்த மாதம் நிறைவுபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளைப் பாராட்டி கெளரவிக்கும் வைபவம் நேற்று முன்தினம் தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்ற போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

‘பொதுநலவாய விளையாட்டு விழாவை ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு முயற்சித்தாலும் அது முடியாமல் போனதாகக் கூறிய பிரதமர் அது இங்கு திட்டமிட்டபடி நடைபெற்றிருந்தால் அது எமது நாட்டுக்கும், எமது வீர வீராங்கனைகளும் பெரும் உந்துதலாக இருந்திருக்கும்.

தோட்டப் பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளையும் விளையாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் வீரர்களைத் தேடி நாம் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள எதிர்காலத்தில் நடைபெறுமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டின் முன்னேற்றம் கருதி எதிர்காலத்தில் சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு அதை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு தொகுதியுடன் இணைந்ததாக அப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அது பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இங்கு கெளரவிக்கப்படும் தெற்காசிய வீர, வீராங்கனைகள் எதிர்காலத்தில் ஆசியாவிலும், சர்வதேச ரீதியிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் அதற்கான முதல் அடி வைத்துள்ள அவர்கள் மேலும் முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியில் பல வெற்றிகளைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தெற்காசிய விளையாட்டு விழாவில் இம்முறை 281 பதக்கங்களைப் பெற்று தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றதோடு 28 வருடங்களின் பின் மெய்வல்லுநர் போட்டிப்பிரிவில் இந்தியாவை முந்திச் சென்று பதக்கங்களைப் பெற்றதை பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எங்கள் நாட்டின் சிறந்த வீரர்களான நீங்கள் எதிர்காலத்திலும் இதைவிட சிறந்த வெற்றிகளைப் பெற முடியும் என இன்று நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். எமது நாட்டில் சகலரினதும் கெரளவம் உங்களுக்கு கிடைத்துள்ளது. விளையாட்டுத் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாடு பின்தங்கிய நிலையில் இருந்தாலும் வலுவான வீரர்களையெல்லாம் வெற்றிகொண்டு பதக்கங்களை அள்ளி வந்தமையை நாம் பெருமையாகக் கருதுகிறோம். இந்த விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட எமது வீரர்களுக்கு சிறந்த வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற செய்தியை நான் அறிவேன் விளையாட்டு முகாமைத்துவம் சம்பந்தமாகவும் குறைபாடுகள் இருந்ததாகவும், மேலும் சில வீரர்கள் உடல்நலக் குறைவுடன் போட்டிகளில் கலந்துகொண்டனர். ஆனால் தாய்நாட்டை வெற்றியின் பால் இட்டுச் செல்வதற்குரிய உங்களிடம் இருந்த மன தைரியத்தை தோற்கடிக்க மேற்கூறிய காரணங்களால் முடியாமற் போனது. நீங்கள் நாட்டின் கெளரவத்துக்காக செயற்பட்டீர்கள். எனவே நாட்டு மக்களின் கெளரவமும் உங்களுக்கு உரித்தாக வேண்டும், டங்கன் வைட், சுசந்திகா ஜயசிங்க வென்ற ஒலிம்பிக் பதக்கம், 1996இல் வென்ற கிரிக்கெட் உலகக் கிண்ணம் போன்றே தெற்காசிய விளையாட்டு விழாவில் எமது வீரர்கள் வென்ற இப்பதங்கங்களும் பெறுமதி மிக்கவையே.

‘ஒரு தகப்பன் தனது மகன் உலகை வெற்றிகொண்டு வரும்வரை எதிர்பார்ப்புடன் காத்திருப்பார். நீங்கள் எல்லோரும் எனது குழந்தைகள் இந்நாட்டுக் குழந்தைகள். நாம் எல்லோரும் நீங்கள் உலகை வென்று வரும் வரை தந்தையின் பாசத்தோடு காத்திருக்கிறோம்” தெற்காசியாவை வெற்றிகொண்டு தாய்நாட்டுக்கு கீர்த்திமிக்க கெளரவத்தை ஈட்டுத்தந்த உங்களை வாழ்த்துகிறேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இங்கு பதக்கம் வென்ற ஒவ்வொரு வீர. வீராங்கனைகளுக்கும் தேசிய விளையாட்டு நிதியத்தின் மூலம் பணப்பரிசும் வழங்கப்பட்டது. தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு 5 இலட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு 3 இலட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 2 இலட்சமும் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் பயிற்சியாளர்களும் கெரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே. டீ. எஸ். ருவன்சந்திர, தேசிய ஒலிம்பிக் சங்க அங்கத்தவர்கள் உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை