அரச பணியாளர்கள் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வில் அரசாங்க அதிபர்

அரச பணியாளர்கள், கூட்டுப்பொறுப்புடன் மக்களுடன் நெருக்கமாக இணைந்து சேவையினை வழங்க தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார அபிவிருத்தியையும், எமது இலக்கு நோக்கிய அடைவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு நேற்றுமுன்தினம் (30) பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டினை வழியனுப்பி, பிறக்கவிருக்கும் 2020 ஆம் ஆண்டினை வரவேற்குமுகமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை மற்றும் கல்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமட் நசீல், கணக்காளர் ஏ.எல்.றிபாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைனுடீன், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல் மற்றும் காரியாலய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரச பணியாளர்கள், பொது மக்களினதும் பிரமுகர்கள், மதத்தலைவர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை மதித்து பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். அதற்காக எமது கலை, கலாசார பாரம்பரியங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அரச கடமையை முழுநேரக் கடமையாக முன்னெடுக்க வேண்டும்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டிலிருந்து நாட்டுக்காகவும், பொது மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு அரச பணியாளர்கள் திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.

அரச பணியாளர்கள் நவீன உலகின் சவால்களுக்கு தங்களை தயார்படுத்துவதற்கான ஆற்றலை விருத்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதிகமான உத்தியோகதர்கள் தங்களது அரச சேவையில் எந்தவித மாற்றமும் காணாது தங்களது ஆரம்ப சேவையில் இருந்த அதே அனுபவத்துடனும், பதவி நிலையுடனுமே ஓய்வு பெற்றுச் செல்பவர்களாக இருந்துவருகின்றனர். இந்தநிலை மாற வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அம்பாறை சுழற்சி நிருபர் 

 

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை