கோடீஸ்வரன் எம்.பி தமிழர் ஜனநாயக சுதந்திர முன்னணியுடன் இணைய முன்வர வேண்டும்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழர் ஜனநாயக சுதந்திர முன்னணியுடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் தமிழர் ஜனநாயக சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தர்.

கல்முனை பிரதேச அபிவிருத்தி மற்றும் எதிர்கால அரசியல் பயணம் குறித்து தமிழர் ஜனநாயக சுதந்திர முன்னணி கட்சியின் பெரியநீலாவணை இளைஞர் சமூகம் ஏற்பாடு செய்த பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கழமை (29) பெரியநீலாவணை பிரதேசத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பணத்திற்கும் பதவிக்கும் சோரம்போய் தற்போது கொள்கையில்லாத அரசியலை நோக்கி பயணிக்கிறது. இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவன் நான் .

கல்முனை பிரதேச செயலகத்தை தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலகமாக பிரிக்க வேண்டும் என்று முயற்சி செய்தவன் நான். எனவே இங்குள்ள மக்களுக்காக விரைவில் அதனை பெற்றுத்தருவேன்.

அதேபோன்று காரைதீவு, நாவிதன்வெளி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை ஒன்றிணைத்து தனியான தமிழர் கல்வி வலையம் ஒன்றை உருவாக்க வேண்டும். எமது பெண்பிள்ளைகள் வேலைசெய்வதற்கு தொழில் பேட்டைகளை உருவாக்க வேண்டும். எனவே எமக்கான அரசியல் பலத்தை நீங்கள் வழங்க வேண்டும்.

மக்கள் எம்முடன் இணைந்து கொள்வதை தாங்க முடியாத கோடீஸ்வரன் போன்றவர்கள் எமக்கு எதிராக அறிக்கை விடுகின்றனர். இதனை விட்டு விட்டு தம்பி கோடீஸ்வரன் எமது தமிழர் ஜனநாயக சுதந்திர முன்னணியுடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும். அவரை வளர்த்தவர்கள் நாம்தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் உப தலைவர் சுப்ரமணியம் விக்னேஸ்வரன், வைத்தியர் ஏ.ஜெ.ரவிஜி, முன்னாள் கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சி தலைவர் கே.ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை