வென்டேஜ் எப்.ஏ.கிண்ண கால்பந்தாட்டம்: யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் அணி வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் வென்டேஜ் எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட தொடரில் 64 அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் (சிங்கிங் பிஷ்) கால்பந்தாட்ட கழகம் இலங்கையின் பிரபல 32 அணிகள் பங்கேற்கும் தொடருக்குள் பிரவேசித்துள்ளது.

பிரபலமான நீர்கொழும்பு ஜூபிட்டர்ஸ் கால்பந்தாட்ட கழகத்தினை 06 : 00 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலமே குருநகர் பாடும் மீன் கால்பந்தாட்ட கழகம் இந்த சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக, ஏற்கனவே தொடர்ந்து மூன்றாவது முறையாக 32 சுற்றுக்குள் பிரவேசித்துள்ள புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தினை குருநகர் பாடும் மீன் கால்பந்தாட்ட கழகம் 32 சுற்றுக்குள் ஏதிர்கொள்ளவுள்ளது.

நீர்கொழும்பு ஜூபிட்டர்ஸ் மற்றும் குருநகர் பாடும் மீன் ஆகிய அணிகள் பங்கேற்ற குறித்த இந்த போட்டி புதன்கிழமை (11) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

முதல் பாதியில் 08 வது நிமிடத்தில் குருநகர் பாடும் மீன் கால்பந்தாட்ட கழகத்துக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதை தவறவிடப்பட்டது. எனினும் 18 வது நிமிடத்தில் அவ் அணி முதலாவது கோலினை போட்டது.

இரண்டாவது பாதியில் முற்று முழுதான ஆதிக்கம் குருநகர் பாடும் மீன் கால்பந்தாட்ட கழகத்திடமே காணப்பட்டது. அந்த ஆதிக்கத்தின் காரணமாக அவ் அணி தொடரான கோல்களையும் செலுத்தியது.

இரண்டாவது பாதியில் 63, 69, 77, 79, 87 ஆவது நிமிடங்களில் குருநகர் பாடும் மீன் தொடரான 05 கோல்களினை செலுத்தியதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் குருநகர் பாடும் மீன் அணியினர் 06 : 00 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த 32 சுற்றுக்கான தகுதியினை பெற்றுள்ளனர்.

குருநகர் பாடும் மீன் அணிக்காக அதன் முன்வரிசை ஆட்டக்காரர்களான எச்.கெய்ன்ஸ் 02 கோல்களையும், வீ. கீதன் 02 கோல்களையும், ஆர்.சாந்தன், எஸ்.சேயன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலினையும் பெற்றனர்.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.எம். பஸ்ரின், எம்.எம். சிபான் ஆகியோர் கடமையாற்றினர்.

உள்ளூர் போட்டிகளை கூட நடாத்த முடியாத நிலையில் புதரும், சகதியுமாக காணப்பட்ட புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானம் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் அயராத முயற்சியின் பலனாக புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்காக மாற்றி அமைக்கப்பட்டதையடுத்து பல தேசிய ஆட்டங்கள் தற்போது புத்தளம் நகரில் தொடராக இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தினகரன் நிருபர்

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை