ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்பு

அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக் கொள்ளவும் அதனை அமைச்சுகள் அரச நிறுவனங்கள் மாகாண சபைகள் என்பவற்றினூடாக முன்னெடுக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட அவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 10 அம்சங்களைக் கொண்ட கொள்கை பிரகடனமான 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சம் மிக்க தொலை நோக்கு, கொள்கை பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதனை அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்த கொள்கை பிரகடனத்தை பெரும்பான்மையான மக்கள் அங்கீகரித்து வாக்களித்துள்ளனர். இதனை செயற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை