மட்டு. மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு

முதற்கட்டமாக  ரூபா 2,325,600 ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் ஒரு வாரத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கென 2,325,600 ரூபாய் முற்பணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (2) மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில் இதுவரை வெள்ள பாதிப்புக்குள்ளாகிய ஏழு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தும், பாதிப்புள்ளாகியும் உள்ளனர். 32 கிராம சேவகர் பிரிவுகளில் 1297 குடும்பங்களில் இருந்து 4612 பேர் பாதிக்கப்பட்டு 5 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 3 முகாம்களில் இருந்தவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி இருப்பதாகவும், தற்போது 2 நலன்புரி முகாம்களில் மட்டும் 53 குடும்பங்களை சேர்ந்த 196 பேர் தங்கியுள்ளனர்.

இதே போன்று உறவினர்களின் வீடுகளில் 1130 குடும்பங்களை சேர்ந்த 4009 பேர் தங்கியுள்ளனர். நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 528,300 ரூபா முற்பணம் வழங்குவதற்காக முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நலன்புரி நிலையங்கள், உறவினர்கள, நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் 1292 குடும்பங்களை சேர்ந்த 4596 பேர்களுக்கு ஒரு வாரத்திற்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென 2,325,600 ரூபாய் முற்பணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேசசெயலக பிரிவிலுள்ள கிரான் பாலத்தில் பயணிக்கும் மக்களுக்கு மூன்று இயந்திரப்படகுகள் வழங்கப்பட்டு மக்களின் சுமுகமான பணிக்கும், சாதாரணதர பரீட்சை எழுதுவதற்கான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வெல்லாவெளி தினகரன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை