இருவாரத்தில் புதிய தமிழ் கட்சி உதயம்

வடக்கு, கிழக்கில் பூரண ஆதரவு

தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவில் இனியும் அங்கம் வகிக்க முடியாது.ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் வெளியேறி இரு வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கவுள்ளோம் என சிரேஷ்ட சட்டத்தரணியும் ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகமுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோ எடுத்த முடிவுக்கு மாறாக, யாழ் மாவட்ட த்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்தது. அதன்படி அவருக்காக தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. இதனையடுத்து ரெலோவின் தலைமைக் குழு திருகோணமையில் கூடி எம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்தது. அத்துடன் செயலாளர் நாயகம் பதவியில் இருந்த என்னை நீக்கியதுடன் முக்கிய சில பதவிகளில் இருந்த ஏனையவர்களும் விலக்கப்பட்டனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தென்னிலங்கை கட்சிகளின் இரு பிரதான வேட்பாளர்களும்

 

5 தமிழ்க் கடசிகள் ஒன்றிணைந்து தயாரித்த 13 அம்சக் கோரிக்கைகளை தொட்டுக் கூட பார்க்க மாடடோம் என கூறினார்கள்.

இவ்வாறான நிலையில் வவுனியாவில் திடீரென கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு எவ்வித நிபந்தைகளும் இன்றி ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானித்தது.

இதே முடிவை ரெலோ தலைமைக்குழுவிலும் பல எதிர்ப்புக்கு மத்தியில் தீர்மானமாக எடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக தமிழரசுக் கடசியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என பலர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் அதில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

எனவே நாம் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து பயணிக்க தீர்மானித்துள்ளோம்.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை