சுவிஸ் தூதரக பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம்

கடத்தல் விவகாரம் தொடர்பில்

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் உத்தியோகத்தர் தனது கடத்தல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) தனது சாட்சியத்தை நேற்று மாலை பதிவு செய்தார். சுவிஸ் தூதரக இலச்சினையுடனான வாகனத்தில் மேற்படி பெண் உத்தியோகத்தர் சி.ஐ.டி திணைக்களத்துக்கு வருகை தந்தார். அந்த வாகனத்துடன் சில தூதரக அதிகாரிகளும் வருகை தந்ததை காண முடிந்தது. வாகனங்களில் வந்த மூவரில் ஒருவர் முகத்தை மூடியவாறு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பெண் உத்தியோகத்தர் மருத்துவ அறிக்கையை பெறுவதற்காக கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சி.ஐ.டி யினரிடம் அறிக்கை வழங்காமல் எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று கொழும்பு பிரதான நீதவான் தடை உத்தரவொன்றை ஏற்கனவே பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பெண் உத்தியோகத்தரின் கடத்தப்பட்ட தினத்தின் நடமாட்டம், சம்பவம் தொடர்பாக சுவிஸ் தூதரகம் முன்வைத்துள்ள நேர அட்டவணையுடன் பொருந்துவதாக இல்லையென்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் மேற்படி பெண் உத்தியோகத்தரின் உடல் நிலை கருதி அவரும் அவரது குடும்பத்தினரும் அம்பியூலன்ஸ் விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட அனுமதிக்க வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை