பாக். முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பிற்கு மரண தண்டனை

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பிற்கு இஸ்லாமாபத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் நிலுவையில் உள்ள உயர் தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று பேர் கொண்ட நீதிமன்றத்தினால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய முஷாரப், 2001 தொடக்கம் 2008 வரை பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி வகித்தார். 2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட முஷாரப் தற்போது துபாயில் உள்ளார்.

தனது பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்குடன் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியபோது, முஷாரப் 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இடைநிறுத்தியது தொடர்பிலேயே அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும் இம்மாத ஆரம்பத்தில் மருத்துவமனை படுக்கையில் இருந்து வீடியோ மூலம் முஷாரப் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியலமைப்புக்கு அப்பால் செயல்பட்டதற்காக பாகிஸ்தானில் வழக்கு விசரணைக்கு முகம்கொடுத்த முதல் இராணுவ ஆட்சியாளர் முஷாரப் ஆவார். 2–1 என்ற பெரும்பான்மையுடன் அவர் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

ஜெனரல் முஷாரப் 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இடைநிறுத்தி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதால் நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டம் வெடித்தது. தம்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்ப்பதற்காக அவர் 2008 ஆம் அவர் பதவியை இராஜினாமா செய்தார்.

1999 தன்னால் பதவி கவிழ்க்கப்பட்ட அரசியல் எதிரியான நவாஸ் ஷரீப் 2013 ஆம் ஆண்டு பிரதமரானபோது முஷாரப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கைத் தொடுத்ததோடு 2014 மார்ச்சில் முன்னாள் ஜெனரல் மீது உயர் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது அரசாங்கம் மற்றும் அமைச்சரவையில் அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டது என்று வாதிடும் ஜெனரல் முஷாரம், இந்த வழங்கு அரசியல் நோக்கமுடையது என்று குறிப்பிடுகிறார். எனினும் அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் அவரது நடவடிக்கை சட்டவிரோமானது என தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி உயர் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படும் எந்த ஒருவரும் மரண தண்டனைக்கு முகம்கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. 2016 தொடக்கம் துபாயில் வசித்து வரும் முஷாரப், பல அழைப்பாணைகள் விடுக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராவதை மறுத்து வந்தார்.

எனினும் இந்தத் தீர்ப்பானது பாகிஸ்தானில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு தொலைதூர முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் இம்மாதிரியாக செயல்படுவதை தடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

தேசத்துரோக வழக்கு:

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை