வெள்ளக் காடாகியது முல்லைத்தீவு, கிளிநொச்சி

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் அவதி

மீட்புப் பணிகளில் இராணுவம்

வட மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் வெ ள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர். இவர்களை இராணுவத்தினர் உழவு இயந்திரம் மற்றும் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்திருப்பதனால் வடமாகாண சுகாதார ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற அனைவரையும் உடனடியாக வேலைக்குத் திரும்புமாறும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போக்குவரத்தும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டம்

கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2,404குடும்பங்களை சேர்ந்த 7,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 320 குடும்பங்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கரைச்சி பிரதேசத்தில் 120 குடும்பங்களும், பளையில் ஒரு குமும்பமும், கண்டாவளையில் 189 குடும்பங்களும், பூநகரியில் 10 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். கரைச்சி பிரதேசத்தில் 567 குடும்பங்களும், பளையில் 169 குடும்பங்களும், கண்டாவளையில் 1635 குடும்பங்களும், பூநகரியில் 33 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியின் பிரதான குளமான இரணைமடு குளத்திற்கு நீர்வரவு அதிகமாக காணப்பட்டமையினால் குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சிறிய குளங்களும் நிரம்பி வான் பாய்கின்ற.

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,695 குடும்பங்களைச் சேர்ந்த 9,376 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை 154 குடும்பங்களைச் சேர்ந்த 657 பேர் 04 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடை மழை காரணமாக பரந்தன்- முல்லைதீவுக்கு இடைப்பட்ட ஏ35 வீதியின் 28ஆம் மைல் கல்லருகே இருந்த பாலம் உடைந்துள்ளது. இதனை திருத்துவதற்கு ஒருவார காலம் எடுக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து

வடமாகாணத்திலுள்ள சுகாதார ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை விடுமுறையில் இருப்பவர்களை உடனடியாக கடமைக்குத் திரும்புமாறும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரம் அழைப்புவிடுத்துள்ளார்.

இதற்காக நேற்று விசேட செய்தியாளர் மாநாட்டைக்கூட்டிய அவர் விடுமுறையில் சென்ற அனைவரையும் உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

இதுவரை வடமாகாணத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துடன், இந்த பிரதேசங்களில் 02 இலட்சத்து அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப் பகுதிகளில் தற்போது டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அவர் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதுடன் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சென்றிருக்கின்றார்.

இதற்கமைய வட மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இன்று முதல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விடுமுறைகளும் உடனடியாக இரத்துச் செய்யப்படுவதனால் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாணவர்கள்

கிளிநொச்சியில் பெய்து வரும் அடை மழையினால் அசெளகரியங்களை எதிர்நோக்கிய க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் சுமார் 150 மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான உதவிகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படையைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளே மாணவர்களுக்கு இதற்கான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதற்கமைய வௌ்ளத்தில் சிக்கிக் கொண்ட 150 மாணவர்களை படையினர் டிரெக்டர் மற்றும் படகு மூலம் இந்து கல்லூரி மற்றும் தர்மபுரம் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

அதேபோன்று வௌ்ளத்தில் மூழ்கிய இரண்டு பாடசாலைகளிலுள்ள தளபாடங்களை அகற்றுவதற்கும் படையினர் தங்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கினர்.

கிளிநொச்சி குறூப், முல்லைத்தீவு குறூப் நிருபர்கள்

Sat, 12/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை