40,000 மெ.தொ. அரிசி சந்தையில் அவசர விநியோகம்

நெருக்கடியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்ைக

நாட்டில் தற்போதுள்ள அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் அரசாங்க களஞ்சியசாலைகளிலுள்ள 40,000 மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விட தீர்மானித்துள்ளது.

மேற்படி 40,000 மெற்றிக் தொன் நெல் அரிசியாக்குவதற்காக

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு வார காலத்துக்குள் அதனை சதொச மூலம் சந்தைக்கு விற்பனைக்காக விடமுடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் நெல் கொள்வனவின் போது முறையான முகாமைத்துவத்தை கடைப்பிடிக்காமையே தற்போதைய இந்நிலைக்கு காரணம். அத்துடன் நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தலிலும் முறையான நடைமுறைகள்் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இருக்கவில்லை.

எவ்வாறெனினும் நாட்டில் அரிசி விலை அதிகரிப்பு இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே தொடரும் ஜனவரி மாதம் நெல் அறுவடை இடம்பெறுவதால் அடுத்த மாதம் அரிசி விலை அதிகரிப்பு சுமுக நிலைக்கு வந்துவிடும்.

நாட்டில் தற்போது வெள்ளைப் பச்சரிசி மற்றும் நாட்டரிசிகளின் விநியோகங்கள் குறைந்துள்ளமையினால் அவற்றின் விலையே அதிகரித்துள்ளது.

சம்பா, கீரி சம்பா போன்றவற்றின் விநியோகங்கள் முறையாக உள்ளன. பெரும்பாலான மக்கள் வெள்ளைப்பச்சரிசி மற்றும் நாட்டரிசியையே உபயோகிப்பதால் அதற்கான விலை சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானம் எடுத்தால் அடுத்து வரும் போகங்களில் எமது உள்ளூர் விவசாயிகள் அதன் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி வரும்.

மிக அவசியமென இனங்கண்டால் மாத்திரமே அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும்.

அடுத்துவரும் இரண்டு போகங்களிலும் நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தலில் முறையான முகாமைத்துவத்தை எமது அரசாங்கம் மேற்கொள்ளும். எந்தக் காலத்திலும் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தையில் அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் கையிருப்பில் உள்ள அரிசியை சந்தையில் விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில வாரங்களில் நாட்டரிசி, சிவப்பரிசி மற்றும் வெள்ளை அரிசி போன்ற சாதாரண அரிசி வகைகளின் விலைகள் ஒருகிலோ 15 ரூபா என்ற அளவில் விலை அதிகரித்துள்ளதையடுத்தே அரசாங்கம் மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளது.

நெற் சந்தைப்படுத்தும் சபையின் சேமிப்பில் இருந்த அரிசி வகைகளே உடனடியாக சந்தையில் விடப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக மற்றும் நலன் பேணலுக்கான இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார். கடந்த மாதம் ஒரு கிலோ 95 ருபாவுக்கு விற்கப்பட்ட நாட்டரிசி தற்பொது ஒருகிலோ 110 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ 90 ருபாவுக்கு விற்கப்பட்டவெள்ளை அரிசி ஒருகிலோ 100 ரூபாவிற்கும் கடந்த நவம்பர் மாதம் ஒரு கிலோ 100 ருபாவுக்கு விற்கப்பட்ட சம்பா அரிசி தற்போது ஒரு கிலோ 110 ரூபாவுக்கு விற்கப்படுகின்றன.

நெல் தட்டுப்பாடு எதுவும் இப்போது இல்லை. அரிசி ஆலை சொந்தக்காரர்களிடம் போதிய நெல் கையிருப்பில் உள்ளது. எனவே அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை. அறுவடைக்காலம் ஆரம்பித்ததும் நமக்கு மேலும் அரிசி கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை