அர்ஜுன் மகேந்திரன் தொடர்பான முடிவு 2 வாரங்களில்

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியான அர்ஜுன் மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு கொண்டுவரும் செயற்பாடு உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெறும் எனஅமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானத்தை இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரி அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஆவணங்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தது. குறித்த ஆவணங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கைகள் அரசியல் தலையீடுகள் அற்ற விதத்தில் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று உதயங்க வீரதுங்கவையும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடும் நாட்டின் சட்ட திட்டங்களிற்கிணங்க இடம்பெறுகிறது. குற்றவாளி எவராயினும் உள்நாட்டு சட்டத்திற்கு அமைவாக அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில், கோப் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த முதல்நாள் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு ஜனாதிபதி தெரிவானதும் அவரது கொள்கை விளக்க அல்லது சிம்மாசன உரையே பாராளுமன்றத்தில் இடம்பெறுவது சம்பிரதாயமாகும். அதற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

ஜனாதிபதி தெரிவாகி 24நாட்கள்தான் கடந்துள்ளன. அவர் திட்டங்களை வகுப்பதற்கான கால அவகாசம் அவசியம். அர்ஜுன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு கட்டாயம் கொண்டுவர நடவடிக்கையெடுப்போம்.

பச்சை, நீலம், சிவப்பு என வர்ணங்களை பார்த்து இந்த விடயத்தில் செயற்பட முடியாது. உலகில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாக மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் உள்ளது.

இவர்களை நாட்டுக்கு கொண்டுவந்து சட்டரீதியான தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கான தடைகளை நீக்குவதே எமது பொறுப்பாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/13/2019 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை