27 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இராஜாங்கனை உள்ளிட்ட 27க்கு மேற்பட்ட நீர்த் தேக்கங்களின் வான்கதவுகள் நேற்று திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்முல்ல தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

அநுராதபுரம், குருநாகல், அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்ததையடுத்து 14வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் அதன் நீர், கலா ஓயாவுக்குள் திறந்து விடப்படுள்ளது.

அங்கமுவ நீர்த் தேக்கத்தின் 02வான் கதவுகளும் யான் ஓயாவின் 05வான் கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. அத்துடன் திஸ்ஸவெவ, அபயவெவ, மகாவிலச்சிய, நாச்சியாதீவு ஆகியவற்றில் நீர் பெருக்கெடுத்துள்ளதுடன் இங்கினிமிட்டிய மற்றும் தபோவ நீர்த் தேக்கங்களின் நீர் மீஓயாவுக்குள் விடுவிக்கப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்தில் கிம்புல்வன ஓயா, அம்பகொலவெவ, தெதுருஓயா, பத்தலகொட ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டையில் லுனுகம்வெஹெர, கிரிந்தி ஓய,முருதவெல,வெஹெரகல,போத எல,பண்டகிரிய ஆகிய நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் உறுகாமம், நவகிரி,உன்னிச்சை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் அம்பாறை மாவட்டத்தில் ரம்பகன் ஓய வின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

அநுராதபுரம் மேலதிக மாவட்ட குறூப் நிருபர்

Fri, 12/06/2019 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை