இரு மொழிகளில் உருவான "சுனாமி"

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை அடிப்படையாக  வைத்து தயாரிக்கப்பட்டுள்ள படம் “சுனாமி”.

இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் ரேணுகா பாலசூரியவின் தயாரிப்பில்  தயாரிக்கப்பட்டுள்ள படம்  “சுனாமி”.

இத்திரைப்படத்தில் நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் தர்ஷன் தர்மராஜ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அத்தோடு சிங்கள திரையுலகின் பிரபலமான நடிகர், நடிகையர்களான பிமல் ஜயகொடி, ஹிமாலி சயுரங்கி ஆகியோரோடு இன்னும் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு விஸ்வ பாலசூரிய ஒளிப்பதிவு செய்துள்ளார். சிரேஷ்ட இசையமைப்பாளர் ரோஹன வீரசிங்க இசை அமைத்துள்ளார்.  

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இரண்டு குடும்பங்கள் தமது குழந்தைகளை தொலைத்து விடுகின்றன.   இந்த நிலையில் குழந்தை யாருக்கு சொந்தமாகின்றது என்ற அடிப்படையில் இத்திரைப்படம் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.  

2009ஆம் ஆண்டில் தொகுப்பாளினியாகக் கால் பதித்து ஆரம்பத்தில் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்று இலங்கை சினிமாத் துறையில், நட்சத்திர நாயகியாகத் திகழும் நிரஞ்சனி சண்முகராஜா, உண்மையில் இலங்கைப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். 

40ஆண்டு கால இடைவெளிக்குப் பின், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களால் நகைச்சுவை, காதல், அதிரடி எனக் கலந்து உருவாக்கப்பட்டத் தமிழ்த் திரைப்படமான ‘கோமாளி கிங்ஸ்’ஸில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நிரஞ்சனி சண்முகராஜா, ஆரம்பத்தில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், இன்று இலங்கை சினிமாத் துறையில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். 

கண்டி, பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தன் 20ஆவது வயதில், தொகுப்பாளினியாகக் களம் இறங்கினார். ஆரம்பத்தில் இத்துறையைத் தெரிவு செய்தமைக்காக குடும்பத்தில் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தாலும் தன் இலட்சியத்தை அடைந்தே தீருவேன் என்பதில் திண்ணமாக இருந்த​ இவரை, காலப்போக்கில் அவர் குடும்பமும் ஏற்றுக்கொண்டது. 

இனிய குரலுக்குச் சொந்தக்காரியாகத் திகழ்ந்த நிரஞ்சனி, 2010ஆம் ஆண்டில், வானொலி நாடகம் மூலமாக கலைத் துறையிலும் தன்னை புகு​த்திக்கொண்டார். பின்னர், குரல் கொடுப்பதில் மட்டுமல்ல நடிப்பிலும் திறமைசாலி தான் என தன் முதலாவது மேடை நாடகம் மூலம் உறுதிப்படுத்தினார். 

இப்படி கலைத்துறையில் தீராத தாகம் கொண்ட நிரஞ்சனி சண்முகராஜா தொடர்ந்து பல மேடை நாடகங்களில் தோன்றியதோடு, அவற்றுக்குப் பல விருதுகளையும் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது. தவிர தமிழ், சிங்களம் என இலங்கைத் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நட்சத்திர நாயகியாக மிளிர்ந்து நிற்பவர் நிரஞ்சனி, இலங்கை தமிழ் சினிமாத்துறையில் ஓர் முக்கிய அங்கம் என்று தான் கூறவேண்டும். 

மலையகத்தைச் சேர்ந்தவரான இவர், இன்று வரை பல இடங்களிலும், பிரதேசவாதப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுத்து வருவதாகக் கூறினாலும், அவற்றையெல்லாம் தாண்டி இனிஅவன், கோமாளி கிங்ஸ் என ஐந்து திரைப்படங்களில் நடித்து தன் ஆளுமையை பறைசாற்றியுள்ளமை இலங்கை தமிழ் பெண் கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினால் மிகையாகாது. 

 

Fri, 12/06/2019 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை