பஸ் வண்டி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் விழுந்து 25 பேர் பலி

இந்தோனேசியாவில் பஸ் வண்டி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் விழுந்ததில் 25 பேர் உயிரிழந்ததோடு மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

தெற்கு சுமத்திரா மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு பஸ் வண்டி 100 மீற்றர் பள்ளத்தில் விழும்போது, அதில் பஸ் ஓட்டுநர் மற்றும் 37 பயணிகள் இருந்துள்ளனர். செங்குத்தான பள்ளத்தில் விழுந்த இந்த பஸ் வண்டி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிர் தப்பியவர்களை மீட்டுவர மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்து வருவதற்கு 120 மீட்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல மணிநேரம் பயணிக்க வேண்டிய பெலம்பாக் நகரை நோக்கி அந்த பஸ் வண்டி சென்றுகொண்டிருந்ததாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர் தப்பியவர்களை வெளியேற்றுவதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக பகர் அலாம் பகுதி பொலிஸ் தலைவர் டொல்லி குமாரா தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளுர் மருத்துவமனையில் சடலங்களை அடையாளம் காணும்படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதியைச் சூழ இருக்கும் வீதிகளில் வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோசமான பாதுகாப்புத் தரம் மற்றும் உட்கட்டமைப்புகள் காரணமாக இந்தோனேசியாவில் வீதி விபத்துகள் பொதுவான ஒன்றாக உள்ளது. மேற்கு ஜாவாவில் கடந்த செப்டெம்பரில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை