அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை தேர்தலை இலக்கு வைத்ததல்ல

அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என சுற்றுலா, விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது மக்களுக்கு வழங்கியுள்ள வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் போதும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பாரிய வரி சுமை தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.

தாம் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாகவே வரிச் சலுகை வழங்குவதாக அவர் அப்போது உறுதியளித்திருந்தார்.

அதற்கு இணங்கவே தற்போது இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்கிணங்க அவர் தமது முதலாவது அமைச்சரவையிலேயே அது தொடர்பில் கலந்துரையாடி உடனடியாகவே வரி குறைப்புகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இது வர்த்தகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வரிச்சுமைகளால் பெரும்பாலானவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை கைவிட்டுச் செல்லும் நிலை உருவானது.

தற்போது அந்த நிலை மாற்றமடைந்து வர்த்தகர்கள் சுமுகமாக தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றிக் கொள்வதற்கு வழி பிறந்துள்ளது.

அத்தோடு விட்டு கொடுக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக சாதாரணமாகவே ஒரு இலட்சம் அல்லது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் என இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முடிவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த வரி குறைப்பு அல்லது வரிவிலக்கு மூலம் ஒருவருக்கு 400 அல்லது 500 ரூபாய் பணம் மீதம் ஆகிறது.

ஆயிரம் ரூபாவை அதிகரிப்பதாக கூறி பல ஆயிரம் ரூபாய்களை இழக்கச் செய்த செயற்பாடுகளையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இதனால் இந்த வரி குறைப்பு மூலம் தனியார் துறை ஊழியர்களும் அதனூடான நிவாரணங்களை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Sat, 11/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை