எப்பொழுது பொதுநலமாக சிந்திக்கின்றோமோ அன்றே எமது சமூகம் முன்னோக்கி பயணிக்கும்

நாம் எப்பொழுது பொதுநலமாக சிந்திக்கின்றோமோ அன்றே நம்சமூகம் முன்னோக்கி பயணிக்கும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட சிவநெறி அறப்பணி மன்றம் நடாத்திய வருமானம் குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் லோகநாயகம் அறக்கட்டளை நிதிய அங்குரார்ப்பண நிகழ்வும் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (24) நடைபெற்றது.

லோகநாயகம் அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் லோ.சந்திரபவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்று பொதுப்பணிகளில் ஈடுபடுகின்றவர்களை காண்பது அரிதாகவுள்ளது. அந்த பணியினை சிவநெறி அறப்பணி மன்றம் மற்றும் லோகநாயகம் அறக்கட்டளை நிதியம் போன்ற அமைப்புக்கள் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன. அவர்களை தட்டிக்கொடுத்து வளர்த்தெடுப்பது நமது ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்பும் ஆகும்.

இதேநேரம் அரசாங்கமும் மற்றும் பொது அமைப்புக்களும் இன்று இலவசக் கல்விக்காக பல்வேறு வகையிலும் பெருமளவிலான நிதியை செலவழிக்கின்றது. அதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வில் திருநீலகண்டர் சைவ மகாசபையின் உறுப்பினர்களான வி.தயாளன்,பி.தணிகாசலம், எம்.சிதம்பரம், லோகநாயகம் அறக்கட்டளை நிதியத்தின் கணக்காளர் ச.ஆனந்தரூபன், இணைப்பாளர் லோ.சரவணபவன், மற்றும் அதிபர் சுரேஸ் ஸ்ரீபன்சன், பிரதி அதிபர் லெட்சுமி உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை