ரஜினிக்கு சிறப்பு விருது!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில்  நேற்று முன்தினத்தன்று ஆரம்பமாகியது. இவ்விழா 28-ம் திகதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவை  தொடக்கி வைத்தார்கள்.  

சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 50-ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக அறிவித்தது மத்திய அரசு. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருது  ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினிக்கு இந்த விருதை பிரபல பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய ரஜினி, இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறினார்.

பிறகு, என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று கடைசியாக தமிழில் பேசி தனது உரையை முடித்துக்கொண்டார். 

Sun, 11/24/2019 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை