தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவு தமிழ் தரப்பினரை பாதித்துள்ளது

அனந்தி சசிதரன்

இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவிதமான கோரிக்கைகளையும் முன்வைக்காமல் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்துள்ளமை,தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர்களை கேலிக்கு உள்ளாக்கும் செயல் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒருபோதும் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது என கூறப்பட்ட போதிலும் யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அதனை உடைத்து 6 கட்சிகளையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்திருந்தனர்.

அதில் 5 கட்சிகள் இணைந்து 13 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட்டபோதும் அதனை பிரதான வேட்பாளர்கள் நிராகரித்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவிதமான கோரிக்கைகளையும் முன்வைக்காமல் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்துள்ளமை தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் என அனைவரையும் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(மன்னார் குறூப் நிருபர்)

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை