இந்த ஆட்சியில்தான் முஸ்லிம் கட்சிகளால் கூடுதலான செயற்பாடுகளை செய்ய முடிந்தது

ஐந்து வருடங்களும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே பிரச்சினை. இதனால் நாங்கள் செய்த பல விடயங்கள் மக்களை சென்றடையவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கு இந்த ஆட்சியில்தான் கூடுதலாக செய்ய முடிந்தது. இந்த ஆட்சி காலத்தில்தான் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து கொடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (04) நடைபெற்ற இக் கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மன்னாரையே தளமாக்கொண்டு இருக்கின்றது. கடந்த காலத்தில் இக்கட்சியானது இங்கு ஏகோபித்த ஒரு கட்சியாக இருந்தாலும் சில காலம் இது பலவீனப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த பிரதேச சபை தேர்தல்களில் இக் கட்சி ஒரு பரிமாண மாற்றத்தை உண்டுபண்ணியிருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது. இக் கட்சியானது முசலிப் பகுதியின் ஆட்சியை கைப்பற்றி விடுவோமோ என்ற அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்த உற்சாகம் எதிர்வரும் மாகாண சபை தேர்தலாக இருக்கலாம் அல்லது பாராளுமன்ற தேர்தலாக இருக்கலாம்.

இதில் நாம் இழந்த ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒத்திகைப் பார்க்கும் தேர்தலே இந்த ஜனாதிபதி தேர்தலாகும்.

நாங்கள் உண்மை வழியிலேயே சென்று கொண்டிருக்கின்றோம்.

பேரினவாத கட்சிகள் முஸ்லிம் தலைவர்களை இராஜினாமா செய்யும்படி கேட்டபொழுது நாங்கள் ஒட்டுமொத்தமாக செய்து கொண்ட இராஜினாமா எல்லோரையும் காப்பாற்றியது.

இந்த இராஜினாமா மூலம் நாங்கள் நண்பர் ரிஷாட் டுக்கு நன்மை செய்திருக்கின்றோம். இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் கணிசமான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களிக்க தயாராக இருந்தார்கள். இவரை நாங்கள் இராஜினாமாவிலிருந்து மட்டும் காப்பாற்றவில்லை. இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்தும் காப்பாற்றியுள்ளோம்.

வில்பத்து காடுகளை அதாவது மன்னார் முசலி பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகளை அழித்த விவகாரத்தில் நாங்கள் தனித்துவமான முறையில் அதை கையாண்டு அதற்கு ஒரு தீர்வை கண்டுவிட வேண்டும் என நாங்கள் ஈடுபட்டபோது அவர் தனது மாமுல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். ஆனால் நாங்கள் அலட்டிக்கொள்ளாது முழு முஸ்லிம் சமூகமும் ஆறுதல்

அடையக்கூடிய மாதிரி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர்களையும் அழைத்து நாங்கள் எங்கள் பதவிகளை இராஜினாமா செய்தோம்.

இந்த ஜனாதிபதி தேர்தல் எமக்கு ஒரு அரசியல் கண்டம். இதை நாம் தாண்ட வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இத்தேர்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இதேவேளையில் தமிழரசுக் கட்சியும் தெளிவான ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது.

கோட்டாபய ஆட்சிக்கு வரப்போவதில்லை. இருந்தும் மாற்றுக் கட்சி தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால் கடந்த காலத்தைவிட இரட்டிப்பு அபாயம் வந்துவிடும்.

இந்த கும்பலின் நோக்கம் ஆட்சியை நிரந்தரமாக வைத்திருப்பது. இதற்கு அவர்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்வதே அவர்களின் நோக்கம். தனக்கு கதிரை இல்லையென்றால் யாரும் இருக்க முடியாது என்பதே அவர்களின் நோக்கம்.

(தலைமன்னார் நிருபர்)

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை