சஜித் ஜனாதிபதியானதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும், மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டு வருகின்றதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணாதாசவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச, முன்னாள் வெளிநட்டு அலுவல்கள் அமைச்சர் றோகித பொகொல்லாகம உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எங்களுக்கு நடைபெற்ற அநீதிகள், துன்பங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியும். அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாக நாங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம். அதற்கும் அப்பால் இன்று சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுகின்றார். அவருடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் வடக்கு, - கிழக்கு பிரதேசத்தில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பதாக கூறியிருக்கின்றார். போரால் பாதிக்கப்பட்ட, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள். பட்டதாரிகள் தொடக்கம் இன்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் இவைகளை அவர் நிறைவேற்றித் தருவார் எனவும் அவர் தெரிவித்தார்.

 

வவுனியா விசேட நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை