அஜித்தை மீண்டும் இயக்குவேன்!

காதல், நகைச்சுவை,  சென்டிமென்ட், அக்‌ஷன் என ஜனரஞ்சகமான அம்சங்களைத் தாங்கிவரும் படங்களை  இயக்கிப் பெயர் பெற்றவர் இயக்குநர் சரண். கமல், அஜித் என முன்னணி நடிகர்களை  இயக்கியவர், சில போராட்டங்களுக்குப் பிறகு ஆரவ்வை நாயகனாக்கி 'மார்க்கெட்  ராஜா எம்.பி.பி.எஸ்' படத்துடன் மீண்டும் கோலிவுட் களத்துக்குத்  திரும்பியிருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் படத்தின் ட்ரெய்லருக்கு  இணையத்தில் வரவேற்பு கரைபுரள, அதற்கான உற்சாகத்திலிருந்த அவருடன்  உரையாடியதிலிருந்து...

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தால் நீங்களும் பேய்ப் பட இயக்குநராகி விட்டீர்கள் போலத் தெரிகிறதே?

இந்தக் கதையைப் பேய்ப் பட ஜானர் என்று சொல்லிவிட முடியாது. பேயும்  கதையில் இருக்கும். என்னுடைய முந்தைய படங்களில் ஒருவித ட்ரீட்மெண்ட்டைப்  பார்த்திருப்பீர்கள். அது அப்படியே இருக்கும். 'முனி' படத்தை முதலில்  தயாரித்தேன். அதன் தொடர்ச்சிதான் இப்போது வரைக்கும் போய்க்கொண்டிருக்கிறது   என அனைவருக்குமே தெரியும். நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் பேய் படமாக இது  இருக்காது என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். படம் முழுக்கவே ​ெகாமெடிதான்.  ஒரு மிகப் பெரிய ரவுடி இதுவரை இந்திய சினிமாவில் சந்திக்காத பிரச்சினையைச்  சந்திக்கிறான். என்ன பிரச்சினை, எப்படி அதை எதிர்கொள்கிறான் என்பது தான்  திரைக்கதை.

ஆரவ்வை எதன் அடிப்படையில் நாயகனாகத் தேர்ந்தெடுத்தீர்கள்? அவருக்கு இரட்டை வேடம்போல் தெரிகிறதே...

இரட்டை வேடம் அல்ல. பேய்த்தன்மை உள்ளே வரும் போது ஒருவன் எப்படி  ரியாக்ட் செய்கிறான் என்ற கோணம் இருக்கும். இதே மாதிரி ஒரு கதைக்கு எந்தவித  இமேஜும் இல்லாத ஒரு நாயகன் தேவைப்பட்டார். அதேநேரம் நல்ல உடலமைப்போடு,  நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையுடன் தேடினேன். அப்போதுதான்  ஆரவ் உள்ளே வந்தார். வழக்கத்துக்கு மாறான ஒரு ரவுடி கதை என்பதால்,  வித்தியாசமான உடல்மொழி தேவைப்பட்டது.

மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு  நடித்தார். படம் வெளியானதும் தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு எக்‌ஷன் ஹீரோ  கிடைத்திருக்கிறார் என்று சொல்வார்கள்.

ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' என்ற பட்டம் கொடுத்ததன் பின்னணி என்ன?

அவருக்கு அந்தப் பட்டம் பொருத்தமானது என நினைக்கிறேன். இந்தப் படத்தில்  அவரது கதாபாத்திரம் எம்.ஆர்.ராதாவின் பெண்பாலாகவே இருக்கும்.  எம்.ஆர்.ராதாவை இமிடேட் பண்றமாதிரி இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக  இருந்தேன். அவரது வசன உச்சரிப்பு, உடல் அசைவுகள் மட்டும் இருக்கட்டும்  என்று ராதிகா மேடத்திடம் சொன்னேன்.

அவரது நடிப்பைப் பார்த்துவிட்டு,  படக்குழுவில் உள்ள அனைவருமே மிரண்டு போனோம். அவரைப் பார்க்கும்போது  எம்.ஆர்.ராதாவை நினைவுபடுத்தியதுபோல் இருக்கும், இவரையும் கௌரவப்படுத்திய  மாதிரியும் இருக்கும் என்று ‘நடிகவேள் செல்வி' என்ற பட்டம் கொடுத்தோம்.  அதற்குத் தகுதி வாய்ந்தவர்தான் அவர்.

பெரிய கதாநாயகர்களை மீண்டும் எப்போது இயக்குவதாகத் திட்டம்?

பெரிய கதாநாயகர்களின் படங்களைப் பண்ணும்போது பிரெஷர் அதிகமாக இருக்கும்.  ‘பிரெஷர் வித் பிளெஷர்’ என்றுதான் பணிபுரிவேன். வளர்ந்து வரும்  கதாநாயகர்களோடு படம் பண்ணினால் ‘பிளெஷர்' மட்டும்தான். அஜித்துடன் ‘காதல்  மன்னன்', ‘அமர்க்களம்' பண்ணும்போது அவருக்காகப் பிரத்யேகமாகப் பண்ணினேன்.

இப்போது அவருக்குப் பின்னால் ஒன்றரைக் கோடி முகங்கள் ரசிகர்களாகத்  தெரிகின்றன. ஆகையால் இப்போது படம் பண்ணினால் ஒன்றரைக் கோடிப் பேருக்கான  ஹீரோவாகப் போட்டுப் படம் பண்ணுவதுபோல் பண்ண வேண்டும். அப்படியென்றால்  எவ்வளவு பிரெஷர் இருக்கும்! அதே போல்தான் விஜயும். அவர்களுக்கு ஏற்றாற்போல்  ஒரு கதையுடன் கண்டிப்பாகப் பண்ணுவேன்.

‘முன்னா பாய் எம்.பி.பி.எஸ்' படத்துக்குப் பிறகு அடுத்தடுத்த பாகங்கள் வெளியாயின. அவற்றை ஏன் நீங்கள் மறு ஆக்கம் செய்யவில்லை?

அவர்கள் என்னைக் கேட்டுத்தான் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ ரீமேக்  செய்தேன். அடுத்த இரண்டு பாகங்களின் ரீமேக்கையும் இயக்கச் சொல்லிக்  கேட்டார்கள். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்போது மும்பையில்தான்  எஃப்.எம் ரேடியோக்கள் பரவலாக இருந்தன. சென்னையில் அவ்வளவு எஃப்.எம்  ரேடியோக்கள் இல்லை. அதனால் அடுத்தடுத்த ரீமேக்குகள் பண்ணினால் எடுபடாது  என்று எண்ணினேன்.

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் எண்ணமுள்ளதா?

படம் தயாரிக்கும் எண்ணமில்லை. 'காதல் மன்னன்' தொடங்கி 'அட்டகாசம்' வரை  எப்படி ஒரு இயக்குநராகப் பணிபுரிந்தேனோ, அப்படித்தான் இப்போது படங்கள் பண்ண  எண்ணம்.

ஒரு இயக்குநர், தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினமான வேலை.  அதனால் எனக்கு வந்த இழப்புகள் அதிகம். இனிமேல் இடைவெளி இல்லாத இயக்குநர்  சரணை மட்டுமே காணலாம்.

Sat, 11/16/2019 - 08:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை