பாக். வளர்ந்துவரும் அணியிடம் இலங்கை இளம் வீரர்கள் தோல்வி

மொஹமது ஹஸ்னைனின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இலங்கைக்கு எதிரான வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தான் வளர்ந்து வரும் அணி 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பங்களாதேஷின் கொக்ஸ் பசாரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் ரொஹைல் நாசிர் (37) மற்றும் சைப் பதர் (16) நான்காவது விக்கெட்டுக்கு 49 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் பாக். அணி ஸ்திரமான நிலையை எட்டியது.

பின்வரிசையில் குஷ்தில் ஷா மற்றும் அமாத் பட் முறையே 32 மற்றும் 44 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் பாகிஸ்தான் அணி 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கலன பெரேரா மற்றும் அமில அபொன்சோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்்த்தினர்.

தொடர்ந்து பதிலெடுத்தாட வந்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 30.4 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆரம்ப வீரர் பெத்தும் நிசங்க பெற்ற 34 ஓட்டங்களுமே அதிகபட்சமாகும்.

வேகப்பந்து வீச்சாளர்களான குஷ்தில் ஷாஹ் மற்றும் மொஹமது ஹஸ்னைன் தமக்குள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹஸ்னைன் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை