ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு அமோக வெற்றி

ஹொங்கொங் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் அமோக வெற்றியீட்டியுள்ளனர். இந்த முடிவுகள் அரசில் தீவிரமாக பிரதிபலிக்கும் என்று அந்நகரின் தலைவர் கெர்ரி லாம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 18 மாவட்ட கெளன்சில்களில் 17 இல் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவுக்கு எதிராக நீடிக்கும் ஜனநாயக ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 71 வீதமாக அதிக வாக்குப் பதிவு இடம்பெற்றது.

ஹொங்கொங் தலைவர் லாமை கடுமையாக கண்டிப்பதாக இந்த தேர்தல் இருப்பதோடு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அரசாங்கம் இந்த முடிவை மதிப்பதாக லாம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டார். தற்போதைய நிலை குறித்து மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்த முடிவுகள் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“மக்களின் முடிவை அரசாங்கம் தாழ்மையுடன் செவிமடுக்கும் என்பதோடு தீவிரமாக பிரதிபலிக்கும்” என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். மாவட்ட கெளன்சிலர்களுக்கு குறைந்த அளவான அரசியல் அதிகாரங்களே உள்ளன. பஸ் பாதைகள், குப்பை சேகரித்தல் போன்ற உள்ளூர் விவகாரங்களிலேயே அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. எனினும் கடந்த காலங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஹொங்கொங் நிறைவேற்று அதிகாரியை தேர்வுசெய்யும் 1,200 உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு கெளன்சிலர்களில் 117 பேர் தேர்வுசெய்யப்படுகின்றனர்.

இந்தப் பெரும் வெற்றியை அடுத்து அந்தக் குழுவுக்கான 117 ஆசனங்களும் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே முடிவுகளில் இவர்களால் அதிக செல்வாக்கு செலுத்த முடியுமாகியுள்ளது.

ஆனால், கடந்த 5 மாதங்களாக ஹொங்கொங்கில் நிலவிவரும் அமைதியின்மை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அரசு கையாண்ட விதத்துக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

சீன அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பலரும் தோல்வியடைந்த நிலையில், இது அந்நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

சீன ஆதரவாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட யுவென் லொங் எனும் கிராமப்புறப் பகுதியிலும் 6 இடங்களை ஜனநாயகத்தை ஆதரிக்கும் தரப்பினர் கைபற்றினர்.

இந்தத் தேர்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளார்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம், சீனாவுக்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று போராட்டக்காரார்கள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி சீனா எந்தக் கருத்து வெளியிடவில்லை. எனினும் ஜப்பானில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ, “என்ன நடந்தாலும் ஹொங்கொங் சீனாவின் ஒரு பகுதி” என்று வலியுறுத்தினார்.

ஹொங்கொங்கை சீர்குலைக்கவோ அதன் வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை அழிக்கவோ எடுக்கப்படும் எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது. ஹொங்கொங் எப்போதும் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாக நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் பிரிட்டனின் காலனியாக இருந்த ஹொங்கொங் சீன நாட்டின் ஒரு பகுதியாக உள்ளபோதும் அந்தப் பகுதியிக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் மக்களுக்கு அதிக உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த சிறப்பு அந்தஸ்து 2047 ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளது. எனினும் மற்றொரு சீன நகராக மாறுவதை ஹொங்கொங்கின் பெரும்பான்மையினர் நிராகரித்து வருகின்றனர்.

குற்றப் பின்னணி கொண்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்துவது குறித்து அறிமுகம் செய்யப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகவே கடந்த ஜுன் மாதம் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம் வெடித்தது.

இந்த சட்டமூலம் செப்டெம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்டபோதும் ஜனநாய ஆதரவு ஆர்ப்பாட்டம் நீடித்து வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. பொலிஸார் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்புகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை