14,000 செம்மறி ஆடுகளுடன் கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்

ரொமேனிய கடற்பகுதியில் 14,000க்கும் அதிகமான செம்மறியாடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கவிழ்ந்த நிலையில் அதில் உள்ள ஆடுகளை மீட்பதற்கு மீட்பாளர்கள் போராடி வருகின்றனர்.

கருங்கடல் துறைமுக நகரான கொஸ்டன்டாவில் இருந்து கடந்த ஞாயிறு காலை புறப்பட்ட குவின் ஹிந்த் என்ற கப்பலே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

22 சிரிய நாட்டவர்களான கப்பலில் இருந்த அனைத்து ஊழியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கப்பலில் இருக்கும் ஆடுகளை காப்பதற்கு ரொமேனிய தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் கரையோர காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கப்பலில் இருந்து நீந்திவந்த நிலையில் குறைந்த 32 ஆடுகள் காப்பற்றப்பட்டபோதும் பலதும் மூழ்கியிருப்பதாக நம்பப்படுகிறது. “நாங்கள் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான ஆடுகளை காப்பாற்றியுள்ளோம், அவை கடலில் நீந்திக் கொண்டிருந்தன” என்று கான்ஸ்டானியாவின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரவில் நிறுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றுக் காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆடுகளை காப்பாற்றுவதற்கும், கப்பலை மீட்பதற்கான நடவடிக்கை முடிந்த பின் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அனுமதிக்கப்பட்ட அளவைக் கட்டிலும் அதிகமான விலங்குகள் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று விலங்குநல அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தக் கப்பல் சவூதி அரேபியாவின் ஜித்தா துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை