கடத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தவர் கோட்டாபயவே

வெள்ளை வான் கடத்தல்

கடத்தப்பட்டவர்கள், வானின்  சாரதியும் நேரில் தெரிவிப்பு

வெள்ளை வான்கள் மூலம் நபர்களை கடத்துவதற்கான உத்தரவுகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவே பிறப்பித்திருந்தாரென வெள்ளை வானில் சாரதியாக பணிபுரிந்த மற்றும் வெள்ளை வானில் கடத்தப்பட்ட இரண்டு நபர்கள் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர்கள் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்தினர்.

கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக அமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்கள் இதனை கூறினர்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வானில் சாரதியாக பணிப்புரிந்தாக கூறும் எந்தனி டக்ளஸ் பெர்னாந்து என்பவர் கருத்து வெளியிடுகையில்,

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவிருந்த 2007 – 2008ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நான் வெள்ளை வானில் சாரதியாக பணிபுரிந்தேன். ஒருவரை கடத்துமாறு உத்தரவு வந்தால் இரண்டு வான்கள் மூலம் அவர் கடத்தப்படுவார். இரண்டு இடங்களில் வாகனம் மாற்றப்பட்டே உரிய இடத்திற்கு அவரை கொண்டுசெல்வோம்.

நாடு முழுவதும் அதற்காக பல இடங்கள் காணப்பட்டன. நான் மொனராகலையில் உள்ள ஒரு வீட்டு வளவிலேயே பணி புரிந்தேன்.

கடத்தப்படும் நபரை குறித்த வீட்டு வளவிற்கு கொண்டு சேர்ப்பதே எனது வேலை.

அதன் பின்னர் வேறு நபர்கள் செயற்படுவார்கள். இரண்டு நபர்களை வெள்ளை வானில் கடத்துவதற்கு நான் பணிபுரிந்துள்ளேன். மொனராகலை வீட்டில் படுகொலை செய்யப்படுபவர்களின் உடற் பாகங்கள் அங்கே அருகாமையில் உள்ள ஒரு முதலை வாழும் குளத்தில் வீசப்படும்.

அந்தக் குளத்தை சென்று ஆய்வுக்கு உட்படுத்தினால் சிலவேளை அதில் எலும்புக்கூடுகள் இருக்கக் கூடும்.

ஆனால், அந்தக் குளம் எங்குள்ளதென எனக்குத் தெரியாது.

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில்தான் இவற்றை செய்தோம் என்பது எமக்குத் தெரியும். வெள்ளை வானில் பணிபுரிந்தவர்கள் அல்லது குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இறுதியில் படுகொலை செய்யப்படும் நிலைமையே காணப்பட்டது.

நாட்டின் எதிர்காலம் கருதி இந்த உண்மைகளை இப்போது வெளியிடுகின்றோம். எமது உயிருக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் வரலாம். அதற்கு நாம் அஞ்சவில்லை. கடந்த காலத்தில் இதனைப் பலரிடம் கூறியும் உண்மைகளை வெளியிட அனைவரும் அச்சப்பட்டனர். சில ஊடங்களும் தகவல்களை வெளியிட மறுத்தன என்றார்.

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட அதுல சஞ்ஜீவ மதநாயக்க என்பவர் இங்கு கருத்து வெளியிடுகையில்,

2013ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 17ஆம் திகதி ராகமை புகையிரத நிலையத்தில் வைத்து நான் கடத்தப்பட்டேன். இரண்டு இடங்களில் என்னை வானிலிருந்து மாற்றி ஒரு வீட்டுக்குள் கொண்டு அடைத்தனர். பின்னர் மறுநாள் மற்றுமொரு இடத்திற்குக் கொண்டுசென்றனர். அந்த வளவு வீட்டில் 31ஆம் திகதிவரை என்னை அடைத்து வைத்திருந்தனர்.

31ஆம் திகதி 56ரக துப்பாக்கியுடன் இருவர் வந்து ஏன் உன்னை கடத்தியுள்ளோம் எனத் தெரியுமா என வினவினர். ஆம் என்றேன்.

கொழும்பில் உள்ள பிரபல நகைக் கடையொன்றுக்கு பிரபாகரனிடமிருந்த தங்கம் மற்றும் பணம் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்படும். அந்த நகைக் கடையில் பணிபுரியும் நபர் ஒருவர் எனது நண்பர். அவ்வாறு தங்கம் கொண்டுவரப்படும்போது அவர்எமக்கு ரகசிய தகவலை வழங்குவார்.

கொண்டுவரப்படும் நபரிடமிருந்து அவற்றை அபகரிப்போம். இரண்டுமுறை அவ்வாறு செய்துள்ளோம். மூன்றாவது முறைதான் நான் அகப்பட்டேன்.

தங்கத்தை கொண்டுவருபவரின் வேலை குறித்த நகைக் கடையில் அதனை ஒப்படைப்பதாகும். அதற்கு முன்னரே நாம் அவற்றை அச்சுறுத்தி பறிப்போம். இந்த காரணத்துக்காகவே நான் கடத்தப்பட்டுள்ளேன் என்பதை அவர்களிடம் கூறினேன்.

எனது இறுதி ஆசை என்னவென கேட்டனர். நான் என் மனைவியுடன் பேச வேண்டுமென கூறினேன். எனது தொலைபேசியில் அழைப்பொன்றை எடுத்துத் தந்தனர். மனைவியிடம், நான் மீண்டும் வருவேனா இல்லையா எனத் தெரியவில்லை. பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி, தொலைபேசியை துண்டித்தேன்.

என்றாலும், அவர்கள் என்னை கொலை செய்யவில்லை. காரணம், மனைவியுடன் நான் கதைத்தமையால் எனது நண்பர்கள் அனைவருக்கும் நான் கடத்தப்பட்டுள்ளேன் என்பது தெரியவரும். அத்துடன் மனைவியும் முன்னெச்சரிக்கையாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் என்னை பயங்கரவாத ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் என்னை கைதுசெய்துள்ளதாக நீதிமன்றில் ஒப்படைத்தனர். ஆனால், நான் பிரபாகரனின் தங்கத்தை கடத்தியதாகவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்து கடந்த மார்ச் மாதம்தான் விடுதலை செய்யப்பட்டேன். எனது வழக்கு இன்னமும் தொடர்கிறது. அதற்கான குற்றப்பத்திரிகை மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் தயாராகவே உள்ளேன். நீதிமன்றிலும் பார்வையிடலாம். இவை தொடர்பிலான உண்மைகளை நாட்டுக்கு நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

மீண்டும் மனித படுகொலை அரசொன்றை அமைத்துவிட கூடாதென்பதற்காகவே இந்த உண்மைகளை வெளியிடுகின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 11/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக