மே.தீவுகள் அணிக்கெதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான இந்தியா அணி, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த மாதம் இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்தநிலையில், இத்தொடர்களுக்கான மாற்றம் கலந்த இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரி-20 அணியை பொறுத்தவரை சமீபகாலமாக ஓய்வில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, உபாதையிலிருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷமியும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இடம்பெறாமல் இருந்த சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா, மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ரி-20 அணியில் சகலதுறை வீரரான தமிழகத்தின் வொஷிங்டன் சுந்தர், அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இத்தொடரில், துணைத் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

பங்களாதேஷ் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் குருணால் பாண்ட்யாவும் நீக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான ஷிவம் டுபே இரண்டு தொடர்களுக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

இறுதி தொடர்களில் இடம்பெற்றிருந்த கலீல் அஹமட் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சரி தற்போது முதலாவதாக ரி-20 அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் டுபே, வொஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், மொஹமட் ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்ததாக ஒருநாள் அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் டுபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், மொஹமட் ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்முதல் போட்டி, எதிர்வரும் 6ஆம் திகதி மும்பை- வாங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடர், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை