ஆணையை மதித்து பதவி விலகுகின்றோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள மக்களாணையை மதித்து அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகின்றோம். எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, நேற்றுக் காலை இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், அரசியலமைப்பில் இடமிருந்த போதும், மக்களாணையை மதித்து நாங்களாகவே பதவி விலகுகின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாம் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம்.

நாங்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை கோருவதாக கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறு நாங்கள் எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. எதிர்க் கட்சியிலேயே இருந்து அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை நல்குவோம்.

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் புதிய ஜனாநயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அமோக ஆதரவை நல்கி இருந்தனர். ஜனநாயக நாடொன்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் எவரும் வாக்களிக்க முடியும். எனினும், தேர்தல் முடிவுகளின் பிறகு சிறுபான்மை மக்கள் தேசத் துரோகம் செய்ததாகவும் பெரும்பான்மை மக்கள் தேசப்பற்றாளாருக்கு வாக்களித்ததாகவும் ஊடகங்களில் மோசமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுபான்மை மக்களும் பெளத்த மத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வாக்களித்துள்ளனர் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.சிறுபான்மையினர் அவர்களின் இனத்தைச் சேர்ந்த வேட்பாளார்களான ஹிஸ்புல்லாஹ், அலவி, இல்யாஸ், சிவாஜிலிங்கம் போன்றோருக்கு அமோக வாக்களித்திருந்தாலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் கூற முடியும்.

நாங்களும் சிறந்த ஒரு பெளத்தருக்கே வாக்களித்திருக்கின்றோம். எனவே விமர்சகர்கள் தமது தவறான பார்வையையும், கருத்துக்களையும் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Fri, 11/22/2019 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை