பெண்ணை கொலை செய்தவருக்கு பொதுமன்னிப்பா?

ராஜபக்ஷவினருக்கு செய்யும் நன்றிக்கடனாகவா பெண்ணொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார் என ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். இதன் பின்னணியின் பண பரிமாற்றம் உள்ளதா? குற்றவாளி ஜனாதிபதியின் உறவினரா? எனவும் அவர் வினவினார். ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயல் மட்டுமன்றி

சட்டம் நீதியை மீறும் செயல் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் குற்றவாளி ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்பட்டார். இளம் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இந்த சம்பவத்தினால் நாட்டுக்கு பாரிய பின்னடைவு தான் ஏற்படும்.

நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை இல்லமால் போயுள்ளது. சர்வதேச ரீதியிலும் நாம் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும்.

கொல்லப்பட்ட அந்த பெண் சுவீடன் நாட்டை சேர்ந்தவர். இது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விடயமாகும். இந்த செயற்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தும்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கை எழுதியுள்ள கடிதத்தை வாசித்தால் இதயம் வெடித்து சிதறும். அத்தகைய நபருக்கு ஜனாதிபதி ஏன் இவ்வாறு மன்னிப்பு வழங்கினார். பொதுமன்னிப்பு வழங்க வேண்டிய பலர் இன்னும் சிறையில் உள்ளனர் அவர்களிருக்க ஏன் இவ்வாறான கொலையாளிக்கு பொது மன்னிப்பு வழங்கினார்?

தூக்குத்தண்டனையை மீள நிறைவேற்றப் போவதாக கூறும் ஜனாதிபதி இறுதியாக நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட நபரை விடுவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை. அநுர குமார திசாநாயக்க மட்டுமே இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு செய்யும் பாரிய அவமதிப்பு. நீதிமன்றமே குற்றவாளி என அடையாளபடுத்திய ஒரு குற்றவாளியை விடுவிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன. தார்மீக உரிமை என்ன. சட்டத்தில் என்ன இருந்தாலும் மனிதாபிமானம் இல்லாது கீழ்த்தரமாக ஜனாதிபதி செயற்பட்டுள்ளார்.

 

சம்ஸ் பாஹிம்

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை