வரி குறைப்பு: மக்களுக்கு நன்மை; பொருளாதாரத்துக்கு புத்துயிர்

வரவு-செலவு திட்டத்தில் மேலும் சலுகைகள்

கடன் சுமையை குறைக்க பிரதமர் ஆலோசனை

வாழ்க்கைச் செலவும் குறைவடையும்

வற் வரி, மூலதன வரி, பங்குச்சந்தை வரி, வருமான வரி, தகவல் தொழில்நுட்ப வரி உட்பட குறைக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளின் பிரதிபலன்களையும் அடுத்தாண்டு முதல் மக்கள் அனுபவிக்க முடியும். வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரம் புத்துயிரும், மறுமலர்ச்சியும் அடையுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வற் வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மீது சுமத்தப்பட்ட மறைமுக வரி குறைவடையும் என்பதுடன், எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவும் குறைவடையும். இதனால் சிறிய, நடுத்தர மற்றும் மத்திய பொருளாதார உற்பத்திகளும், சேவைகளும் அடுத்தாண்டு முதல் பாரிய வளர்ச்சிகாணும் எனவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் மீதான வரிகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதால் இத் துறையில் அதிகம் ஈடுபட்டுள்ள இளம் சமுதாயம் பாரிய நன்மையடையும் என்பதுடன், தேசிய பொருளாதாரத்துக்கு அது வலுவானதாக மாறும். சிறிய முயற்சியாண்மைகள் அதிகரிக்கும்.

வரி குறைப்பினால் தற்போது அரச வருமானம் குறைவடைகின்ற போதிலும் நாம் வரியல்லாத முறையில் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக கொள்கைகளை வகுத்து வருகின்றோம். எதிர்வரும் ஆண்டு எமது அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் இதனையும் விட பல நன்மைகளை மக்கள் அடைவார்கள்.

புதிய அரசாங்கம் மக்கள் மீது கட்டுக்கடங்காத வகையில்

சுமத்தியிருந்த நேரடி மற்றும் மறைமுக வரிகளை நேற்று முன்தினம் பாரிய அளவில் குறைத்துள்ளது. இதனைச் செய்ய முடியாதென எமது எதிர்தரப்பினர் கூறியிருந்தனர். ஆனால், நாம் செய்து காட்டியுள்ளோம்.

17 சதவீதமாக இருந்த ‘வற்’ வரியை 8 சதவீதமாக குறைத்துள்ளோம். அதன்மூலம் மக்கள் பாரிய நன்மையடைவார்கள். இது மக்களிடமிருந்து மறைமுகமாக அறவிடப்பட்ட வரியாகும். அனைத்துப் பொருட்கள் மீதும் வற் வரியே சுமத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் வாழ்கைச் செலவு பாரிய அளவில் அதிகரித்துக் காணப்பட்டது. பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டிருந்தது. பங்குச் சந்தை மற்றும் மூலதன வரியை நாம் குறைத்துள்ளதால் நேற்றுமுன்தினம் முதல் பங்குச் சந்தையில் பங்கு பரிமாற்றங்கள் வளர்ச்சி கண்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பத்துறை மீதான அனைத்து வரிகலும் நீக்கப்பட்டுள்ளன. வருமான வரி, ‘வற்’ அல்லது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளிலும் இருந்து இத்துறை விடுவிக்கப்படுள்ளது.

இதனால் தகவல் தொழில்நுட்ப துறையில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். தகவல் தொழில்நுட்ப துறையின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கியுள்ள பாரிய பின்புலமாக இது அமையும். இந்த துறையில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் மென்பொருள் உள்ளிட்ட தயாரிப்புக்களை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

முன்னைய அரசாங்கத்தின் வரி கொள்கையின் காரணமாக இத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். இதனை கருத்தில் கொண்டே கோட்டாபய ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்திற்கும் நாம் முக்கியத்துவம் வழங்கியிருந்தோம்.

இத் துறையின் வரி மூலம் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இத்துறை மேலும் அபிவிருத்தி அடைவதுடன் நாட்டுக்கான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வருமானம் மேலும் அதிகரிக்கும்.

வருமான வரியை குறைத்துள்ளோம். 1,50,000 வருமானம் பெறுபவர்களும் கடந்த அரசாங்கத்தில் வரியை விதித்திருந்தனர். இதனால் நடுத்தர அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பாரிய கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்தனர். 2,50,000 இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களுக்கே நாம் வரியை விதித்துள்ளோம்.

இரண்டரை இலட்சத்திற்கு 6 சதவீத வரி அறவிடப்படும். அதுவும் மூன்று கட்டங்களாக விதித்துள்ளோம். இரண்டரை இலட்சத்திலிருந்து இன்னும் இரண்டரை இலட்சம் அதிகரிக்கப்பட்டால் 6 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக வரி வீதம் அதிகரிக்கும். அதிக்கூடுதலாக 18 சதவீதம் வருமான வரி அறவிடப்படும். ஆனால், கடந்த அரசாங்கம் எவ்வித முறைமைகளுமின்றி 24 சதவீதம் வரியை அறவிட்டிருந்தது.

புள்ளி விபரங்களின் பிரகாரம் அரசாங்கத்தின் ஒருநாள் செலவு 7.2 பில்லியன்களாகும். ஆனால், அரச வருமானம் 5.2 பில்லியன்களாக தான் உள்ளது. ஆகவே, நாம் வினைத்திறனுள்ள வகையில் அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களை மாற்றியமைக்கவுள்ளோம். அதற்காகவே தொழில்வாண்மைமிக்க சிறந்த பணிப்பாளர்களையும், தலைவர்களையும் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார்.

அடுத்தாண்டு வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை 5 சதவீதமாக பேணுவதே எமது இலக்காகும். அதற்காகவே அரச செலவீனங்களை பாரிய அளவில் குறைத்துள்ளோம். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உட்பட அரசின் அடிமட்டம் வரை செலவுகளை குறைத்துள்ளோம்.

ஜனாதிபதி நேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் 10 பேர் கொண்ட சிறிய குழுவொன்றே சென்றுள்ளது. இதற்கு முன்னர் ஒரு ஜனாதிபதி சென்றால் 150 அல்லது 200 பேர் வரை அவருடன் செல்வர். ஆகவே, நாம் புதிய முன்னுதாரத்தை காட்டியுள்ளோம்.

அதேபோன்று வங்கித் துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ச இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் உட்பட பணியாளர் குழாமுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

சகித்துக்கொள்ள முடியாத வகையில் கடன் சுமையிலுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா? என அவர் மத்திய வங்கி ஆளுநரிடம் வினவியுள்ளதுடன், ஒரு வாரகாலத்துக்குள் அதற்கு பதிலளிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

நிலையான வைப்புகளுக்கு கிடைக்கும் வட்டி மீதான வரியை நீக்குவதற்கு நாம் முடிவுசெய்துள்ளோம். குறிப்பாக அந்த வட்டி வருமானத்தில்தான் ஓய்வுபெற்ற பல அரச ஊழியர்களும் சில முதியவர்களும் தமது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர்.

குறிப்பாக தமதுக்குத் தேவையான மருத்துவச் செலவுகளையும் அதில்தான் அவர்கள் பூர்த்தி செய்கின்றனர்.

அதேபோன்று சிறுவர்களுக்காக பெற்றோர் சேமிக்கும் சிறுவர் கணக்குகளுக்கும் வரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே, இவை அனைத்தையும் நாம் நீக்கியுள்ளோம்.

நாம் செய்துள்ள இந்த மாற்றத்தின் பிரதிபலன்களை அடுத்தாண்டில் மக்கள் அனுபவிப்பர். என்றாலும், வரி குறைப்பால் உடனடியாகவும் சில பிரதிபலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நீண்டகாலமாக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகனை பயன்படுத்துபவர்கள் குறைந்தளவான கட்டணத்தையே செலுத்துகின்றனர். 30, 40 வருடங்களாக இந்நிலை தொடர்கிறது.

அதனை நாம் மாற்றி வரியல்லா முறையில் அரச வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளை செய்வோம். அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் இதனைவிடவும் பல நன்மைகள் கிடைக்கும். அத்துடன், மக்களுக்கான சலுகை பொதிகளும் விரைவில் வரும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை