அரச ஊழியர் பிரச்சினைகளுக்கான தீர்வை ஆராய்வதற்கு ஆணைக்குழு

இரண்டாம் மொழி அறிவு அவசியம்

அரசாங்க ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை அமைத்து தீர்வு காணும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியை அவரது ஆலோசனையுடன் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

சேவை யாப்பு இல்லாத சகல துறைகளுக்கும் சேவையாப்பு உருவாக்கும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன உறுதியை செயற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று தமது அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறுகையில்,

அரச நிறுவனங்களுக்கு சேவை பெற வரும் மக்கள் தாம் விரும்பிய மொழியில் சேவையை பெறும் வகையில் ஊழியர்கள் இரண்டாவது மொழியை அறிந்திருக்க வேண்டும். இது இன நல்லுறவுக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும்.

செயற்திறன்மிக்க அரச துறை தொடர்பில் ஜனாதிபதி பல இடங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக அமைச்சு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அரச துறையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடு குறித்து ஆராய ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவரின் ஆலோசனையுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டது. அந்த முடிவையும் மாற்றியமைக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவதன் உண்மையான பலன் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அரச துறையில் மோசடிகளை ஒழிக்க வேண்டும். சிலரது பலவீனம் காரணமாக இவ்வாறு மோசடிகள் இடம்பெறுகின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு இரண்டாம் மொழி தொடர்பான தேர்ச்சி இருக்க வேண்டும். சேவை பெற வரும் மக்களுடன் பேசுவதற்கு அவர்களின் தாய்மொழியை அரச ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும். தாம் விரும்பும் மொழியில் செயற்பட மக்களுக்கு வாய்ப்பிருக்க வேண்டும்.

புதிதாக அரசு துறையில் இணைக்கப்படும் ஊழியர்களுக்கு இரண்டாம் மொழி தொடர்பான அறிவை கட்டாயமாக்குவது உகந்தது என கருதுகிறேன்.

இது தொடர்பான செயற்திட்டம் அரச ஊழியர்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பல்வேறு மொழிகள் பேசும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 11/29/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக